பாடல் எண் :3818

சோதி மணிமா ளிகையின் கட் சுடரும் பசும்பொற் காலமளி
மீது பெருமா டமையிருத்தி நம்பி மேவி யுடனிருப்பக்
கோதில் குணத்துப் பரவையார் கொழுந னார்க்குந் தோழர்க்கும்
நீதி வழுவா வொழுக்கத்து நிறைபூ சனைகண் முறையளித்தார்.
71
(இ-ள்) சோதி....உடனிருப்ப - ஒளிவீசும் மணிகள் பொருந்திய திருமாளிகையின்கண் ஒளிவிளங்கும் பசும்பொன்னாலியன்ற கால்களையுடைய ஆசனத்தின் மேல் சேரமான் பெருமாளை அமரும்படி செய்து நம்பிகளும் பொருந்தி உடன் இருக்க; கோதில்....முறை அளித்தார் - குற்றமற்ற குணத்தையுடைய நங்கை பரவையார் தமது கணவனாராகிய நம்பிகளுக்கும் அவரது தோழராகிய சேரலனாருக்கும் நூல்கள் விதித்த நீதியினின்றும் வழுவாத ஒழுக்கத்தில் நின்று நிறைந்த பூசையினை முறைப்படி செய்தனர்.
(வி-ரை) இப்பூசனைகள் அடியார்கள் தமது மனையில் எழுந்தருளியவுடன் ஆசனத்தமர்த்திச் செய்யத் தக்கவை. இவை திருவமுதூட்டுதற்கு முன் செய்யப்படுவன. “கொண்டு வந்து மனைப்புகுந்து குலாவு பாதம் விளக்கியே, மண்டு காதலி னாத னத் திடை வைத்த ருச்சனை செய்தபின்Ó (443); “கதுமெனக் கணவ னாரைக் கண்ணுதற் கன்ப ரோடும், விதிமுறை தீப மேந்திÓ (851) என்பன முதலியவை காண்க.
கோதில் குணத்து - நீதி வழுவா ஒழுக்கத்து நிறை பூசனைகள் - என்பன விதி முறை மரபு ஒழுக்கத்தினைக் குறித்தன.
கொழுநனார்க்கும் தோழர்க்கும் - சிறப்பும் உரிமையும் பற்றிக் கொழுநனாரை முன்வைத்துக் கூறினார்; அவருடன் ஒப்பச் சேரனாருக்கும் உடன் பூசனைகள் அளித்தற்குரிமை தோன்றத் தோழர் என்றார்.
நீதி வழுவா - நிறை - பூசனைகள் முறை - இவை சிவாகமங்களுள் விதிக்கப்பட்டன. முன்னரும் “விதிமுறைÓ (851) என்றது காண்க
பசும்பொற்கா லமளி - பொற்கால்களையுடைய கட்டில்; பீடம்; ஆசனம்.
பூசனைகள் - தூபதீபம் ஏந்துதல் முதலாயின. அளித்தார் - செய்தனர்.