பாடல் எண் :3819

தாண்டு புரவிச் சேரர்குலப் பெருமா டமக்குத் திருவமுது
தூண்டு சோதி விளக்கனையா ரமைக்கத் துணைவர் சொல்லுதலும்
வேண்டும் பரிசு வெவ்வேறு விதத்துத் கறியும் போனகமும்
ஈண்டச் சமைப்பித் துடன்வந்தார்க் கெல்லா மியல்பின் விருந்தமைத்தார்.
72
(இ-ள்) தாண்டு....சொல்லுதலும் - தாண்டிச் செல்லும் குதிரைப்படையினை யுடைய சேரமான் பெருமாளுக்குத் தூண்டு சோதி விளக்குப் போன்ற பரவையாரைத் திருவமுது அமைக்கும்படி துணைவராகிய நம்பிகள் சொல்லுதலும்; வேண்டும்...விருந்தமைத்தார் - அவர் வேண்டும் தன்மையினால் வெவ்வேறாகிய அனேகவித முள்ள கறிகளும் போனகமும் விரைவிற் சமைப்பித்து அவருடன் வந்தார்க்கெல்லாம் இயல்பின் விருந்தினை அமைத்தனர்.
(வி-ரை) தாண்டு புரவி - தாண்டிச்செல்லும் தன்மையினையுடைய குதிரைப் படை.
தாண்டு புரவி - வரலாற்றி னிறுதியில் சேரமான்பெருமான் குதிரைமேல் ஏறி இவ்வுலகைத் தாண்டிக் கயிலை செல்லும் சரிதக் குறிப்புப்படவும் நின்றது.
விளக்கனையாரைத் திருவமுதமைக்கத் துணைவர் சொல்லுதலும் - என்க; கற்பித்த வழிநிற்கும் கடப்பாடு பற்றித் தூண்டு சோதி விளக்கனையார் என்றார் துணைவர் - கணவர் ; நம்பிகள், திருவமு தமைத்தல்பற்றி நம்பிகள் சேரனாரைச் சந்தித்தபோதே அறிவித்திருக்கலாமே எனின், அப்போது அவர் மனமுழுதும் அவரை உடன் அழைத்துச் சென்று இறைவரைச் சேவித்துவரும் இன்பத்துள்ளேயே அழுந்தியிருந்ததென்க.
வெவ்வேறு விதம் - சுவையாலும் உண்ணும் வகையாலும் வேறு வேறாக அமைந்த நிலை; “உண்டி நாலு விதத்தி லாறு சுவைத் திறத்தினில்Ó (443); போனகம் - திருவமுது; சோறு; வெவ்வேறு விதம் என்றதனைப் போனகம் என்பதனுடனும் கூட்டி உரைக்க நின்றது. வெவ்வேறு போனகமாவன பல வேறு வகைச் சிறுசோறு, சிந்திரான்னம் என்பர். ஈண்ட - விரைவாக.
உடன் வந்தார் - சேரனாருடன் வந்த பரிசனங்கள், “வேண்டு வாரை யுடன் கொண்டுÓ (3797); இயல்பின் - அவ்வவர்க்கேற்ற பண்பின்.
விருந்து - புதுமை; புதியராய் வந்தவர்; அவர்பொருட்டு அடப்பட்ட அமுது முதலியன; விருந்தினர்க்கிடும் அமுதுக்காகி வந்தது; இருமடி ஆகுபெயர்.
ஈண்டு - என்பதும் பாடம்.