பாடல் எண் :3820

அரசர்க் கமைத்த சிறப்பினுமே லடியார்க் கேற்கும் படியாக
விரவிப் பெருகு மன்பினுடன் விரும்பு மமுது சமைத்ததற்பின்
புரசைக் களிற்றுச் சேரலனார் புடைசூழ்ந் தவரோ டமுதுசெயப்
பரவைப் பிறந்த திருவனைய பரவை யார்வந் தறிவித்தார்.
73
(இ-ள்) அரசர்க்கு.....படியாக- அரசர் என்ற தன்மைக்குத் தக்கபடியாக அமைத்ததினும் சிறப்பின் மேலாய் அடியார் என்ற தன்மைக்கு எற்கும்படியாக; விரவி....சமைத்ததற்பின் - பொருந்திப் பெருகும் அன்பினோடு விரும்புகின்ற திருவமுதினைச் சமைத்த பின்பு; புரசை....அமுதுசெய - கழுத்துக்கயிற்றினை யணிந்த யானைகளையுடைய சேரலனார் தமது உடன் வந்தவர்களோடும் திருவமுது செய்ய; பரவை...அறிவித்தார் - கடலிற் பிறந்த திருவினை ஒத்த பரவையார் வந்து நம்பிகளுக்கு அறிவித்தார்.
(வி-ரை) அரசர்...படியாக - அரசர்க் கமைத்த சிறப்பு - உலகியல் பற்றியது; அடியார்க் கேற்கும்படி -சிவன்பால் - அன்பினியல் பற்றியது; மேல் - இஃது அதனினும் மேம்பட்டது என்றறிவித்து உலகினர்க்குத் தெருட்டியதாம்; சேரனாரிடம் இவ்விரு தன்மைகளும் சிறந்தனவாக இருப்பவும், இங்குப் பரவையார் அவற்றுள் மேலாக எண்ணிக்கொண்டு அமுதூட்டியது மேம்பட்ட அடியார் தன்மைபற்றி என்பது குறிப்பு. அதுவே சிறந்த குறிக்கோள் என்றறிவித்த நயமும் காண்க; இப்புராணத்திலே உட்கோளாக விளங்குவது அதுவேயாம்.
புரசைக்களிறு - புரசை - யானைக் கழுத்தணி கயிறு; களிற்றுச் சேரலனார் - “வேழமுடைத்து மலைநாடுÓ என்றபடி நாட்டின் உரிமைச் சிறப்புக் குறித்தது.
புடைசூழ்ந்தவர் - சேரர் பிரானுடன் வந்தவர்கள்.
பரவைப் பிறந்த திரு - பரவை - அருட்கடல்; திரு - அருட்கடலிற் றோன்றும் உமையம்மை: சிவசத்தி சுவரூபமான மகாலட்சுமி என்பர்; இவர் சிவபூசையில் வாயுகோணத்தில் வைத்து வழிபடப்படும் தேவி; பரவையார் உமையம்மையாரது பணிசெய்து அத்தன்மை பெற்றவர் என்பது அவரது மேன்மை குறிப்பது. அவரது பெயர்ச்சிறப்பும் குறிப்பு; 294 பார்க்க.
அறிவித்தார் - நம்பிகளுக்கு என்பது வருவிக்க; வரும் பாட்டுப் பார்க்க.