“சேரர் பெருமா னெழுந்தருளி யமுது செய்யச் செய்தவத்தாற் றாரின் மலிபூங் குழன்மடவாய்! தாழா தமுது செய்விÓ யெனப் பாரின் மலிசீர் வன்றொண்ட ரருளிச் செய்யப், பரிகலங்கள் ஏரின் விளங்கத் திருக்கரத்தி லிரண்டு படியா வேற்றுதலும். | 74 | (இ-ள்) தாரின்மலி பூங்குழலாய் - பூமாலையினை அணிந்த குழலினை யுடைய பரவையே! செய்தவத்தால் - முன்பு செய்தவத்தின் பயனாக; சேரர்......அமுதுசெய்ய - சேரமான் பெருமாள் இங்கு எழுந்தருளித் திருவமுது செய்யும்படி பெற்றமையாலே; தாழாது அமுது செய்வி.....அருளிச் செய்ய - காலந் தாழ்க்காமல் திருவமுது செய்விப்பாயாக என்று உலகில் நிறைந்த சிறப்பினையுடைய வன்றொண்டர் அருளிச் செய்ய; ஏரின்..ஏற்றுதலும் - அழகின் விளங்கும் தமது திருக் கரத்தினாலே இரண்டு படியாகப் பரிகலங்களை ஏற்றுதலும். (வி-ரை) செய்தவத்தால் - அமுது செய்ய - என்க; சேரமான் பெருமாள் திருவமுது செய்யும் பேறு முன்னை நாளிற் செய்தவத்தா லன்றிப் கிடைக்கப்பெறாதென்பதாம். தவத்தால் - தவத்தின் பயனாக; செய் -முன்செய்த. செய்வி - செய்தற்கேற்ற நிலைகளை அமைக்க. பரிகலம் - உண்கலம்; ஏரின் விளங்க - அழகு பொருந்தத் திருத்தப்பட்டு விளங்க. திருக்கரத்தில் - பரிசனங்களாலன்றி மனைக்கடனுடைய தமது திருக்கையினாலே; இறைவிக்குப் பணி செய்த பேறு பெற்றமையால் திருக்கரம் என்றார். இரண்டு படியா - இரண்டு, படியினையுடையனவாக; இருவேறிடங்களில்; ஆக என்பது ஈறுகெட்டு ஆ என நின்றது. படி இரண்டாவன- நம்பிகளுக்கு ஒரு தனி யிடத்திலும் சேரலனாருக்குப் பிறிதோரிடத்திலு மாவன; ஒருவர் சைவ அந்தணரும் மற்றவர் அரசருமா தலின் உலகியல் நிலையின் அறநூல் விதித்தவாற்றால் ஒருங்குண்ண இசையாமையின் அம்மரபு பற்றி அம்மையார் இவ்வாறு வெவ்வேறாக ஏற்றினர் என்பதாம். அதுபற்றியே நம்பிகள் உடனே இருந் தமுதுசெய்ய வேண்டினபோது சேரனார் வெருவுற்று மறுத்தார் என்பது மேற்பாட்டினால் பெறப்படும்; உடனிருந் தமுதுசெய்யும் தகுதி பலவாற்றாலும் தமக்கில்லை என்பது சேரலனார் கருத்து. ஆயின், நம்பிகள் அவ்வாறு அவரைத் தம்முடனிருந்து அமுது செய்ய வேண்டினமையும் அவ்வாறே அவர் அமுது செய்தருளியமையும் யாது காரணம் பற்றி? எனின், அஃது அன்பினியில் பற்றியதென்க. அன்பினியல் உலகியலின் அறநூல் ஒழுக்கத்தின் மேம்பட்ட தென்க. முன்னர் “அரசர்க் கேற்ற பெற்றியினு மடியார்க் கேற்கும் படியாகÓ (3820) என்றதும் இக்குறிப்புத் தருவதாம். அப்பூதிநாயனார் புராணத்தினும் (1823) இதுபற்றி உரைத்தவையும் இங்குக் கருதத்தக்கன. ஏற்றுதல் - பரிகலங்களை அமுது செய்தற்கு உரியவாறு அமைத்தல்; ஈர்வாய் வலம்பெற வைத்தல், பீடம் அமைத்தல், திருக்கை நீவுதற்கு நீர் வைத்தல் முதலாயின வெல்லாம் இதனுள் அடங்கும். திருத்திக்கால் இரண்டிற் படியா என்று பாடங்கொண்டு சுத்தி செய்து இரண்டு முக்காலிகளிலே சமமாக வைத்து என்றுரைப்பாருமுண்டு, அதன் பொருத்தம் ஆராயத்தக்கது. பரிகலம் - உண்கலம்; கால் - அதற்காக வரும் முக்காலி; 3732 பார்க்க. செய்ய தவத் - சேயதவத் - என்பனவும் பாடங்கள். |
|
|