பாடல் எண் :4026

எயிலணையு முகின்முழக்கு மெறிதிரைவே லையின்முழக்கும்
பயிறருபல் லியமுழக்கு முறைதெரியாப் பதியதனுள்
வெயிலணிபன் மணிமுதலாம் விழுப்பொருளா வனவிளக்கும்
தயிலவினைத் தொழின்மரபிற் சக்கரப்பா டித்தெருவு
5
(இ-ள்) எயிலணையும்.....பதியதன்கண் - மதில்களை அணைகின்ற மேகங்களின் ஓசையும், எறிகின்ற அலைகளையுடைய கடலினது ஓசையும், பயிலப்படுகின்ற பல இயங்களின் ஓசையும், ஆகிய இவைகூடிப் பிரித்தறிய முடியாதபடி சத்திக்கின்ற அப்பதியில்; தயிலவினை.......சக்கரப்பாடித் தெருவு - எண்ணெய் ஆட்டும் செக்குத் தொழிலுடைய மரபினர் வாழ்கின்ற சக்கரப்பாடித் தெரு என்பது; வெயிலணி...விளக்கும் - ஒளி வீசுகின்ற பலவகை மணி முதலாகிய தூய பொருள்கள் விளக்குந் தன்மையுடையது.
(வி-ரை) பொருள் - தெரு - விளக்கும் என்று கூட்டுக. முறை தெரியா - மூன்று முழக்கங்களும் இவை இன்னவென வேற்றுமை காண முடியாத நிலை.
விழுப்பொருளாவன - பொருள், தெருவு விளக்குதலாவது அவ்விழுப்பொருள்கள் வீசும் ஒளியினால் தெரு விளங்குதல். இத்தெருவில் வாழ்வோரது செல்வநிலை; அத்தெருவில் தயிலவினையாளர் வைக்கும் பெருவிளக்குகளால் அப்பொருள்கள் இரவினும் விளக்கம் வெபறுவன என்பதுமாம். தயிலவினைத் தொழிலாவது செக்கு உழன்று எண்ணெய் எடுத்து விற்கும் செக்கார் என்னும் மரபின் குலத்தொழில். (செக்கார் - செக்கின் றொழிலுடையவர்)
சக்கரப்பாடி - சக்கர எந்திரத்தாற் றொழில் செய்து வாழும்மரபினர் வாழுமிடம். சக்கிரி - செக்கான் - செக்கையுடையவர் என்பது நிகண்டு.