பாடல் எண் :3824

பனிநீர் விரவு சந்தனத்தின் பசுங்கர்ப் பூர விரைக்கலவை
வனிதையவர்கள் சமைத்தெடுப்பக்கொடுத்து மகிழ்மான்மதச்சாந்தும்
புனித நறும்பூ மாலைகளும் போற்றிக் கொடுத்துப் பொற்கொடியார்
இனிய பஞ்ச வாசமுட னடைக்கா யமுது மேந்தினார்.
77
(இ-ள்) பனிநீர்.......கலவை பனிநீருடன் பொருந்திய சந்தனத்தினுடன் பச்சைக் கர்ப்பூரம் சேர்ந்த விரைக் கலவைக் குழம்பினை; வனிதை யவர்கள்....கொடுத்து - உரிய பெண்கள் அரைத்துச் சேர்த்து எடுப்பக் கொடுத்து; மகிழ்......கொடுத்து - மகிழ்வு தரும் கத்தூரிச் சாந்தினையும் தூய மலர்மாலைகளையும் அமைவுபடக் கொடுத்து; பொற்கொடியார்....ஏந்தினார் - பரவையம்மையார் இனிய பஞ்சவாசகங்களுடன் தாம்பூலத்தையும் ஏந்தினர்.
(வி-ரை) இவை திருவமுதுண்ட பின்னர்ச் செய்யும் உபசார வகைகள்.
கலவை - பச்சைக் கர்ப்பூரம், குங்குமப்பூ, பனிநீர் முதலியவை கூட்டி அமைத்த சந்தனக் குழம்பு. கலவை - கலத்தலாலாகியது; விரை - மரபுப் பெயர் வழக்கு. வனிதையவர்கள் - சந்தனக் கலவை அமைத்தற்குரிய பெண்கள். “குங்குமத்தின் செழுஞ்சேற்றின் கூட்டமைப்போ ரினங்குழுமÓ (3078) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. இத்தொழில் செய்யப் பெண்களை நியமித்தல் உலகியற் சிறப்புடையோர்பாற் காணலாம்.
மகிழ் மான்மதச் சாந்தும், மாலைகளும், போற்றிக் கொடுப்ப - மகிழ் - மகிழ்ச்சி தரும்; மான்மதம் - கத்தூரி; சாந்து - கத்தூரி முதலிய அரிய வாசனைப் பண்டங்கள் கூட்டியமைத்தமைச்சாந்து; திலகம்; அணிவது. போற்றி - உரியவகையால் அமைத்தலும் ஏந்துதலும் செய்து.
பஞ்சவாசம் - “தக்கோலந் தீம்பூத் தகைசா லிலவங்கங், கற்பூரஞ் சாதியோ டைந்துÓ; அடைக்காயமுது - தாம்பூலம்; உடன் - பஞ்சவாசமும் தாம்பூலமும் ஒருங்கு சேர்ந்து ஏந்துதற் குரியவை; அடை - வெற்றிலை; காய் - பாக்கு.
விரைக்கலவை கொடுத்தும், போற்றிக் கொடுத்தும் - ஏந்தினார் - என்று பிரித்து வெவ்வேறுவினைகள் தந்தோதியது அவ்வவை பயன்படுத்தும்வெவ்வேறு நிலைகளையும் அவற்றுக்கேற்றவாறு தரப்படும் நிலைகளையும் குறித்தது. விரைக்கலவை மெய் பூச்சாதலும், மான்மதச் சாந்தும் பூமாலையும் அணிதலும், பஞ்சவாசமும் அடைக்காயமுதும் உண்ணுதலுமாதல் குறிக்க. ஏந்தினார் - தாம்பூல மேந்துதல் என்பது மரபு வழக்கு.