பாடல் எண் :3825

ஆய சிறப்பிற் பூசனைக ளளித்த வெல்லா மமர்ந்தருளித்
தூய நீறு தங்கடிரு முடியில் வாங்கித் தொழுதணிந்து
மேய விருப்பி னுடனிருப்பக் கழறிற் றறிவார் மெய்த்தொண்டின்
சேய நீர்மை யடைந்தாராய் நம்பி செம்பொற் கழல்பணிந்தார்.
78
(இ-ள்) ஆய....அமர்ந்தருளி - முன் சொல்லியவாறு ஆகிய சிறப்பிற் செய்யப்பட்ட பூசனைகளை யெல்லாம் விரும்பி ஏற்றுக் கொண்டருளி; தூய நீறு.....அணிந்து -தூய்மை செய்யும் திருநீற்றினை வாங்கி வணங்கித் தமது திருமுடியில் அணிந்து; மேய விருப்பி னுடனிருப்ப - பொருந்திய விருப்பத்தினோடு உடன் இருக்கப் பெற்றமையாலே; கழறிற்றறிவார்.....பணிந்தார். கழறிற் றறிவார் உண்மையாகிய திருத்தொண்டினது செம்மைதரும் தன்மையினை உள்ளபடியே பெற்றவராகி நம்பிகளது செம்பொற் கழல்களில் வீழ்ந்து பணிந்தனர்.
(வி-ரை) ஆய சிறப்பிற் பூசனைகள் - முன் உரைத்தவை (3818 - 3823- 3824) எல்லாம் மாகேசுவர பூசை என்ற வகையாற் சிவாகமங்களுட் பேசப்பெறுவன.
தூய நீறு வாங்கித் தொழுது தங்கள் முடியில் அணிந்து - என்க; அமுது கொண்டபின்னும் நீறணிதல் வேண்டுமென்பது விதி; பூசனை முறையில் முடிவில் நீறு சாத்துதலும் விதியாம்.
உடனிருப்ப - அடைந்தாராய் என்று - கூட்டி - முடிக்க. இருப்ப - இருக்கப் பெற்றமையாலே.
சேய - செம்மை தரும்; பெரிய என்றலுமாம். சேய நீர்மை அடைந்தாராய் - முன்னர் நெடுந்தூரமாய் நின்ற தன்மையினை அணித்துடையதாகக் கிடைக்கப் பெற்றாராய் என்றுரைப்பினு மமையும்.
நம்பி....பணிந்தார் - இறைவரருள் கூட்டக் கூடி நின்று, அவரால் தொண்டி னீர்மை அடைந்தாராதலின் பணிந்தார் என்க.
அறிந்தாராய் - என்பதும் பாடம்.