மலைநாட் டரசர் பெருமானார் வணங்க வணங்கி யெதிர்தழுவிக் கலைநாட் பெருகு மதிமுகத்துப் பரவை யார்தங் கணவனார் சிலைநாட் டியவெல் கொடியாரைச் சேரத் தந்தாரெனக்கங்கை அலைநாட் கொன்றை முடிச்சடையா ரருளே போற்றி யுடனமர்ந்தார். | 79 | (இ-ள்) மலைநாட்டு.....வணங்க - மலைநாட்டின் அரசர் பெருமானாகிய சேரலனார் வணங்கி; எதிர்தழுவி - தாமும் எதிர்வணங்கித் தழுவிக்கொண்டு; கலைநாள்.....கணவனார் - கலைகள் பெருகும் நாளில் முழுமதி போன்ற முகத்தினை யுடைய பரவையாரது கணவனாராகிய நம்பிகள் . சிலைநாட்டிய....அமர்ந்தார் - விற்குறியினைப் பொறித்த வெற்றி பொருந்திய கொடியினையுடைய சேரமான் பெருமாளைச் சேரும்படி தந்தருளினார் என்று கங்கைநதி அலைகின்ற புதுப்பூங்கொன்றை சூடிய சடைமுடியினை யுடைய இறைவரது திருவருளினையே துதித்து உடனமர்ந்தருளினர். (வி-ரை) வணங்க எதிர்வணங்கித் தழுவி - என்க; எதிர் வணங்குதல் - அன்பு நிலையினும், தழுவுதல் - நண்புரிமை நிலையினும் ஆம். முன் (3812-ல்) உரைத்தவை பார்க்க. கலை பெருகுநாள் மதி என்க; கலை நிரம்பிய முழுமதி. சிலை நாட்டிய வெல்கொடி - சிலை - வில்; நாட்டுதல் - பொறித்தல்; விற்கொடி சேரர்க்குரியது. “தென்னவன் செம்பியன் வில்லவன்Ó (பிள் - செவ்வழி - மூக்கீச் - 9); வில்லேந்திய கோலத்துடன் சேரமான் பெருமாணாயனாரது திருவுருவங்கள் திருவஞ்சைக் களத்தில் தாபித்து வழிபடப் பெறுகின்றன. வெல்கொடி - “தாவில் விறல்Ó (3761) இவர் அரசாட்சியினை ஏற்கும் போது இறைவர்பால் வேண்டிப் பெற்றனராதலின் எஞ்ஞான்றும் வெற்றி தரும் கொடி என்றார். சேரத் தந்தார் - தோழமை பெறக் கூட்டுவித்தார்; “அவரை நினைப்பிப்பார்Ó (3781). அருளே - அருளினையே; ஏகாரம் பிரிநிலை; இவரும் எண்ணாது அவரும் நினையாது இறைவர் இடையாடி இருவரையும் கூட்டுவித்தமையின் அத்திருவருளின் பெருமையினையே போற்றினர்; இவ்வாறு உலகில் எச்செயலினுள்ளும் திருவருளின் பெருக்கினையே காண்பது பெரியோரது நிலை. உடன் அமர்ந்தார் - நண்புரிமையால் ஒக்க விரும்பியிருந்தனர். கங்கையலை - கங்கையாறு; அலை - அலையினையுடைய ஆற்றுக்கு வந்தது; அலைக்கங்கை என மாற்றி யுரைப்பினுமாம்.கங்கையும் கொன்றையும் உடைய என உம்மைகள் விரிக்க; நாட் கொன்றை - கொன்றையின் புதிய பூ. |
|
|