பாடல் எண் :3827

செல்வத் திருவா ரூர்மேவுந் செம்பொற் புற்றி னினிதமர்ந்த
வில்வெற் புடையார் கழல்வணங்கி வீதி விடங்கப் பெருமானை
மல்லற் பவனி சேவித்து வாழ்ந்து நாளு மனமகிழ்ந்து
சொல்லித் தகர்தா மிருவர்களுந் தொடர்ந்த காத லுடன் சிறந்தார்.
80
(இ-ள்) செல்வம் வணங்கி - செல்ல நிறைந்த திருவாரூரிற் பொருந்திய செம்பொற் புற்றினை யிடங்கொண்டு இனிது விரும்பி வீற்றிருந்தருளும் வில்லாகமேரு மலையினையுடைய பெருமானாரது திருவடியினை வணங்கியும்; வீதிவிடங்கப் பெருமானை......சேவித்து - ; வீதிவிடங்கப் பெருமானாராகிய தியாகேசரை வண்மையுடைய திருவீதி விழாவிற் சேவித்தும்; வாழ்ந்து....மகிழ்ந்து - பெருவாழ்வு பெற்றார்களாய் நாடோறும் மனமகிழ்ந்து; சொல் வித்தகர்தாம் ..சிறந்தார் - யாவரும் எடுத்துச் சொல்லும் பேரறிவாளர்களாகிய இருபெரு மக்களும் தொடர்ந்துவந்த பெருவிருப்பத்தினோடும் சிறக்க வீற்றிருந்தருளினர்.
(வி-ரை) செல்வத் திருவாரூர் - அருட் செல்வமும் பொருட் செல்வமும் நிறைந்த திருவாரூர்.
செம்பொற் புற்றின்...உடையார் - புற்றிடங் கொண்ட பெருமானார் . வன் மீகநாதர் என்பது வடமொழி.
வீதி விடங்கப் பெருமான் - தியாகேசர்.
மல்லற் பவனி சேவித்து - திருவீதியில் திருவிழாச் சேவித்து; விழாச் சேவிப்பதன் பெருமையினை ஆளுடைய அரசுகள் “முத்து விதானம் Óஎன்றதொரு தனித் திருப்பதிகத்தினாற் போற்றியதும், அது கேட்டாங்கே உடன் புறப்பட்டு ஆளுடைய பிள்ளையார் திருவாரூரில் போந்து வழிபட்டமையும் ஆகிய சிறப்புக்கள் ஈண்டு நினைவு கூர்தற்பாலன; மல்லற் பவனி - திருவீதியில் கண்டோர் யாவரும் கண்குளிரச் சேவிப்பவும் வேண்டிய வேண்டியாங்கு எய்தவும் பெருஞ் சிறப்புடன் விழா நிகழ்தல் குறிக்க மல்லல் - என்றார். சேரலனார் வந்த காலம் பங்குனி விழா அல்லது திருவாதிரை விழாச் சமயமாதல் கூடும் என்பது ஈண்டுக் கருதத் தக்கது.
வணங்கியும் வாழ்ந்தும் என உம்மைகள் விரிக்க. வாழ்தல் - பெருவாழ்வு பெறுதல்; பெருவாழ்வாகிய உறுதிப்பொருளைத் தரும் என்பதாம். “மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன்.....கண்ணி னாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல்Ó (2985) என்று ஆளுடைய பிள்ளையார் ஆணையிட் டருளியமை காண்க. விழாச் சேவித்தற் பொருட்டே அமர்நீதி நாயனார் திருப்பழையாறையினின்றும் போந்து திருநல்லூரிற் குடிகொண்டமையும், திருநீலக்க நாயனார் திருவாரூர்ப் பெருமானது திருமணலிக்கெழிச்சி சேவித்துப் பேறு பெற்றமையும் முதலியவை இங்கு நினைவு கூர்தற்பாலன.
சொல்வித்தகர் - சொல் - அறிவோர்கள் எல்லாராலும் எடுத்துப்போற்ற பெற்ற; சொல்வித்தகர் - சொல்லில் வல்ல - செந்தமிழ் வல்லவர்களாகிய - பேரறிவாளர்கள் என்றலும் பொருந்தும். வித்தகம் - ஞானம் - பேரறிவு. “சொல் வித்தகத்தால்Ó. (தேவா - பிள் - காந்தா - நணா - 11)
தொடர்ந்த - தம்மை யறியாது முன்றொடர்பினால் அருள்வழி வந்த; சிறத்தல் - இனிதிருத்தல்.