பாடல் எண் :3828

இவ்வா றொழுகு நாளின்க ணிலங்கு மணிப்பூண் வன்றொண்டர்
மைவாழ் களத்து மறையவனார் மருவு மிடங்கள் பலவணங்கிச்
செய்வார் கன்னித் தமிழ்நாட்டுத் திருமா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூதூர்க ளிறைஞ்ச முறைமை யானினைந்தார்.
81
(இ-ள்) இவ்வாறு ஒழுகு நாளின்கண் - இவ்வாறு சிவானந்தந் திளைத்து இருவரும் ஒழுகி வருகின்ற நாளில்; இலங்கு....வன்றொண்டர் . விளங்குகின்ற மணிப்பூண்களை அணிந்த வன்றொண்டர்; மைவாழ்.....வணங்கி - விடம் வாழும் கண்டத்தினையுடைய வேதியராகிய இறைவனார் எழுந்தருளிய இடங்கள் பலவற்றையும் வணங்கிச் சென்று; செய்வார்...இறைஞ்ச - வயல்கள் நிறைந்த கன்னி நாடென்றும் தமிழ் நாடென்றும் சொல்லப்படும் பாண்டி நாட்டிலே திருமாமதுரை முதலாக நெருங்கிய நீண்ட சடையினையுடைய இறைவரது பலவூர்களையும் வணங்கு தற்கு; முறைமையால்.....நினைந்தார் - திருவருள் முறைமையினாலே நினைந்தருளினர்.
(வி-ரை) இவ்வாறு - முன்பாட்டிற் கூறியபடி; ஒழுகுதல் - இறைவரைச் சேவித்துச் சிவானந்தத்தினுள் திளைத்து இன்புறுதல்.
மைவாழ் - மை - விடம்; மை வாழ்வு பெறுதலாவது உயர்ந்த இடம் பெறுதலும், விடம் என்ற குறைவும் கேடும் நீங்கி உயிர்களை வாழ்விக்கும் அமுதத்தன்மை பெற்றுப் போற்றப்படுதலுமாம்.
இடங்கள் பல - இவை சோழநாட்டிலும் இடையில் நடுநாட்டிலும் உள்ளவை. வணங்கி - வணங்கிச் சென்று.
செய்வார் - செய் - வயல்கள்; வார்தல் - நிறைதல்.
கன்னித் தமிழ்நாடு - கன்னிநாடு எனப்படும் தமிழ்நாடு; பாண்டியநாடு.
திரு மா மதுரை - மா - அத்திருப்பதியின் அளவிறந்த பெருமைகளைக் குறித்தது.
முதலான - மூதூர்கள் - இவை பாண்டி நாட்டுப் பதிகள்.
இடையில் இடங்கள் பல வணங்கிச் சென்று பாண்டி நாட்டுக்குச் சென்றதுவும், பாண்டி நாட்டில் மதுரையினை வணங்கி மற்றும் பதிகளைப் பணிந்ததும் பின்னர் வரலாற்றினுள் அறிக.
முறைமை - திருவருள் வழியே வரும் குறிப்பு; முறை - ஊழ் - பான்மை - நியதி என்பன ஒரு பொருளன. முறைமை - இறைஞ்ச என்று கூட்டி முறைப்படி வணங்க என்றுரைத்தனர் முன் உரைகாரர்.