சேரர் பிரானு மாரூரர் தம்மைப் பிரியாச் சிறப்பாலும் வாரம் பெருகத் தமக்கன்று மதுரை யால வாயமர்ந்த வீர ரளித்த திருமுகத்தால் விரும்பு மன்பின் வணங்குதற்குச் சார வெழுந்த குறிப்பாலுந் தாமு முடனே செலத்துணிந்தார். | 82 | (இ-ள்) சேரர் பிரானும் - சேர மன்னரும்; ஆரூரர்...சிறப்பாலும் - நம்பியாரூரரைப் பிரியாதுடனிருத்தலை விரும்பிய சிறப்புக் கருதிய எண்ணத்தாலும்; வாரம்..குறிப்பாலும் - அன்பு பெருகும்படி அன்று தமக்கு மதுரைத் திருவாலவாயில் விரும்பி எழுந்தருளிய வீரராகிய சோமசுந்தரப் பெருமான் அளித்தருளிய திருமுகத்தினைப் பற்றி விரும்பிய அன்பினாற் சென்று அவரை வணங்குதற்குச் சார்பு பெறத் திருவுள்ளத்தில் எழுந்த குறிப்பினாலும்; தாமும்...துணிந்தார் - தாமும் அவருடனே கூடச் செல்வதற்குத் துணிந்தனர். (வி-ரை) பிரியாச் சிறப்பு - பிரியாதுடனுறையும் சிறப்பினைப் பெற நினைந்தமை. வாரம் பெருக - அளித்த - என்று கூட்டுக; வாரம் - அன்பு; அன்பு பெருகும்படி; பெருகும் பொருட்டு; ஆலவாயமர்ந்தார் வேறு எவ்வகையிலேனும் பத்திரனாருக்குப் பொருள் - நிதி - கொடுத்தருளி யிருக்கலாமாயினும், அவ்வாறருளாது சேரனாருக்குத் திருமுகம் தந்தருளியது சேரனாரது அன்பினைப் பெருக்கி வாழ்வித்தற் பொருட்டு என்பதாம். வீரர் - யானை யெய்தது, நாகமெய்தது, அங்கம் வெட்டியது முதலிய எண்ணிறந்த வீரஞ் செய்த திருவிளையாடல்களைக் காண்க. வீரம் - மாயப்படையினை வெற்றி கொண்டருளுதலுமாம். சார எழுந்த குறிப்பாலும் - சார்பு பெறப் பொருந்த எழுந்த திருவுள்ளக் குறிப்பினாலேயும். தாமும் உடனே செலத்துணிந்தார் - திருச்சிலம்போசை யளித்த நாயகரைக் கும்பிடவும், அவரால் நினைப்பிக்கப்பட்ட வன்றொண்டரைக் கண்டு தொழப் பெறவும் ஆக இரண்டு நிலைகளையே எண்ணிப் போந்தார் சேரனார் (3792). இங்கு அவ்விரண்டு முற்றியன வாயினும் நம்பிகளுடனே பல பதிபணிந்து மதுரை சென்று வணங்குதற்கு உடன்செலத் துணிந்தார்; அதற்குக் காரணங்கள் இரண்டு. அவை, நம்பிகளைப் பிரியா துடனுறைதல் வேண்டியமையும் திருமுகந் தந்தருளிய ஆலவாய்ப் பெருமானை வணங்குதலுமாம் என்க. ஆர்வம் பெருக - என்பதும் பாடம். |
|
|