பாடல் எண் :3830

இருவர் திருவுள் ளமுமிசைந்த பொழுதி லெழுந்து திருவாரூர்
ஒருவர் மலர்த்தாள் புக்கிறைஞ்சி யுடன்பாட் டருளாற் போந்தருளி
மருவு முரிமைப் பெருஞ்சுற்றம் வரம்பில் பணிகள் வாகனங்கள்
பொருவில் பண்டா ரங்கொண்டு போது வார்க ளுடன்போத,
83
(இ-ள்) இருவர்...பொழுதில் - முன்கூறியபடி இருவருடைய திருவுள்ளங்களும் இசைந்த போது; எழுந்து...போந்தருளி - திருமாளிகையினின்றும் எழுந்து திருவாரூரிற் புற்றிடங்கொண்ட பெருமானது மலர் போன்ற திருவடிகளைத் திருப் பூங்கோயிலினுள்ளே புகுந்து வணங்கி அவரது உடன்பட்ட திருவருளினைப் பெற்றுப் புறம்போந்தருளி; மருவும்...போத - உடனே போதப் பொருந்தும் உரிமை யுடைய பெருஞ் சுற்றங்களும் எல்லையற்ற அணிகளையும் வாகனங்களையும் ஒப்பற்ற சேம நிதிகளையும் கொண்டு செல்வார்களும் தம்முடனே போத,
(வி-ரை) இருவர்...இசைந்த பொழுதில் - இசைதல் - நம்பிகள் தலயாத்திரையினை மேற்கொண்டு பாண்டிநாடு செல்ல எண்ணியதுவும் அதற்குச் சேரனார் இசைந்ததுவும், சேரனாரும் உடன்போத எண்ணியதனை நம்பிகள் இசைந்ததுவும் ஆம்.
திருவாரூர் ஒருவர் - புற்றிடங்கொண்ட பிரானார்; இருவர் - ஒருவர் - அடிமுரண்தொடை. இவர்கள் இருவராயினும் ஒருவரையே மனங்கொண்டனர் என்பது. ஒருவர் - பதி; ஒப்பற்றவர்; “தனக்குவமை யில்லாதான்Ó (குறள்); புக்கு - திருக்கோயிலினுள்ளே புகுந்து; கோயிலினுள் - என்பது இசையெச்சம்; ஒருவரை எப்போதும் மனம் பொருந்த வைத்தார்களாதலின் இருந்த இடத்தினின்றே வணங்கலாமாயினும் திருக்கோயிலினுட் சென்று முறையால் வணங்கி அருள்விடை பெற்றனர் என்பார் இறைஞ்சி என்னாது புக்கிறைஞ்சி என்றார்.
உடன்பாட்டருளால் - உடன்பாடாவது அருள்விடை தரப்பெறுதல்; இத்திரு வருட்குறிப்பினை உள்ளுணர்ந்த பெரியோர்களே அறிகுவர். ஆளுடைய பிள்ளையார் திருவாலவாயில் சமணவாதத்தின் முன்னர்த் திருக்கோயிலினுட் சென்று இறைவரது திருவுள்ளமறிந்த வரலாற்றினை நினைவுகூர்க. (2634)
மருவும் உரிமைப் பெருஞ்சுற்றம் - சுற்றம் - இங்கு நம்பிகளையும் சேரனாரையும் எப்போதும் உடன் சூழும் உரிமையுடைய மக்களைக் குறித்து நின்றது; திருமேனிப்பாங்கு செய்யும் உரிமைப் பணியாளரும் மெய்காவலரும் முதலிய பரிசனங்கள்; இதற்குச் சுற்றத்தார்கள் என்றுரைத்தனர் முன் உரைகாரர்; உடற் சார்புகளைப் பற்றாதவர்கள் எந்தம் பெருமக்கள். சுற்றம் - சுற்றிச் சூழ்ந்திருப்பவர்கள்.
வரம்பில்...போதுவார்கள் - பணிகளையும் வாகனங்களையும் பண்டாரத்தையும் கொண்டு போதும் பரிசனங்கள் என்க. சுற்றமும் போதுவார்களும் என்று உம்மைகளை விரிக்க; பணிகள் - அணிவகைகள்; நம்பிகள் “மன்னவர் திருவுந் தங்கள் வைதிகத் திருவும் பொங்கÓ (165) என்றபடி கொண்ட திருமணக் கோலத்துடனே இறைவர் பணித்தபடியே (273) உலகிற் சரித்துவருகின்றாராதலின் பணிகள் வேண்டப்படுவன; மன்னவர் திருவும் வைதிகத் திருவும் பொங்கும் அவரது திருக்கோலத்தினை (330 - 331) முன்னர் ஆசிரியர் காட்டியமை இங்கு நினைவுகூர்தற்பாலது; சேரலனார் அரசராதலின் அவர்க்கும் மன்னர்க்குரிய மகுட முதலியவை வேண்டுவன ஆயின.
வாகனங்கள் - நீண்ட தலயாத்திரையில் இவர்களும் பரிசனங்களும் போதவும், வேண்டும் பண்டங்கள் கொண்டு செல்லவும் இவை உதவுவன.
பொருவில் பண்டாரம் - சேமநிதிகள்; பொக்கிஷம் என்பர்; இவை இருவர்க்கு மேற்பன. நிதிச்சாலையின் பெயர் ஈண்டு அங்குள்ள நிதிகளைக் குறித்தது.
போத - சூழ - இறைஞ்சிக் - கடந்து போந்து - என மேல் வரும்பாட்டுடன் முடிக்க.