சேவித் தணையும் பரிசனங்கள் சூழத் திருவா ரூரிறைஞ்சிக் காவிற் பயிலும் புறம்பணையைக் கடந்து போந்து கீழ்வேளூர் மேவிப் பரமர் கழல்வணங்கிப் போந்து வேலைக் கழிக்கானற் பூவிற் றிகழும் பொழினாகை புகுந்து காரோ ணம்பணிந்தார். | 84 | (இ-ள்) சேவித்தணையும்...சூழ - தம்மை வழிபட்டு உடன் வரும் பரிசனங்கள் சூழ; திருவாரூர்...போந்து - திருவாரூரினை வணங்கிச் சோலைகள் மிக்க புறம்பணையினைக் கடந்து சென்று; கீழ்வேளூர்...போந்து - திருக்கீழ்வேளூரின் சேர்ந்து அங்கு இறைவரது திருவடிகளை வணங்கி மேற்சென்று; வேலை...புகுந்தார் - கடற்கழிக்கானல் சூழ்ந்து மலர்கள் நிறைந்து விளங்கும் பொழில்களையுடைய திரு நாகப்பட்டினத்திற் சென்று திருக்காரோணத்தினைப் பணிந்தனர். (வி-ரை) சேவித் தணையும் பரிசனங்கள் - இருவர்பாலும் சேவகம் செய்யும் ஏவலாளர்கள். திருவாரூர் இறைஞ்சி - நகரின் புறத்தே சென்று அதன் கிழக்கெல்லையில் நகரை நோக்கி வணங்கி; “ஆரூரினிற் புறம்புபோந் ததனையே நோக்கி நின்றேÓ (2416) என்பது முதலாக வருவன காண்க. கீழ்வேளூர் - திருவாரூருக்குக் கிழக்கில் 4 நாழிகை யளவில் உள்ளது; இதற்கு நம்பிகள் பதிகம் கிடைத்திலது! வேலைக் கழிக்கானல் - கடற்கழி மணற்காடு சூழ்ந்த. பூவிற்றிகழும் பொழில் - மலர்கள் நிறைந்த சோலைகள்; பூவில் - உலகத்தில் என்று கொண்டு உலகில் விளங்கும் பதியாகிய நாகை என்று கூட்டியுரைப்பினுமமையும். பூவில் - இல் - இன்னுருபு - ஒப்புப் பொருளில் வரும் ஐந்தனுருபாகக் கொண்டு பூப்போல விளங்கும் என “பொன்னி நாடெனுங் கற்பகப் பூங்கொடி மலர்போல்Ó (3992) என்று பின்வரும் பொருளுக் கேற்ப உரைத்தலுமாம். நாகை புகுந்து - காரோணம் பணிந்தார் - நாகை - ஊர்ப்பெயர்; காரோணம் கோயிலின் பெயர். |
|
|