“திருக்கா ரோணத் திருப்பீரேÓ யென்னு மன்பர் சிந்தையினை உருக்கார் வச்செந் தமிழ்மாலை சாத்திச் சிலநா ளுறைந்துபோய்ப் பெருக்கா றுலவு சடைமுடியா ரிடங்கள் பலவும் பணிந்தேத்தி அருட்கா ரணர்தந் திருமறைக்கா டணைந்தார் சேர ராரூரர். | 85 | (இ-ள்) திருக்காரோணத் திருப்பீரே....போய் - திருநாகைக்காரோணத்தில் மேவியிருந்தீரே என்று மகுடம் பூண்ட அன்பர்களுடைய சிந்தைகளை உருக்குகின்ற, ஆர்வத்தினாலே போந்த, செந்தமிழ் மாலையாகிய திருப்பதிகத்தினை அருளிச்செய்து அணிந்து சிலநாள்கள் அங்குத் தங்கியிருந்து மேற்சென்று; பெருக்காறு.....ஏத்தி - பெருகிவரும் கங்கையாறு உலவுதற்கிடமாகிய சடையினையுடைய பெருமானார் எழுந்தருளியுள்ள பதிகள் பலவற்றையும் வணங்கித் துதித்துச் சென்று; அருட்காரணர்தம்.....ஆரூரர் - அருளையுடைய மூலமுதல்வராகிய இறைவரது திருமறைக்காட்டினைச் சேரர்பெருமானும் நம்பியாரூரரும் அணைந்தார்கள். (வி-ரை) திருக்காரோணத்து....தமிழ்மாலை - “திருக்காரோணத் திருப்பீரேÓ என்பது “கடனாகைக் காரோண மேவியிருந்தீரே!Ó என்னும் பதிக மகுடத்தின் பொருள் குறிப்பது; அன்பர் சிந்தையினை உருக்கு ஆர்வம் - இஃது அத்திருப்பதிகத்தின் அன்பு நிறைந்த தன்மையும் பண்புமாம். அருட்காரணர் - அருளையுடைய மூலகாரணர்; முதல்வர். இடங்கள் பல - இவை பொய்கைநல்லூர், திருவரிஞ்சையூர், திருக்கிள்ளிகுடி, திருக்கோளிலி, திருவாய்மூர், திருமுகத்தலை முதலாயின என்பது கருதப்படும். திருக்காரோணச் சிவக்கொழுந்தைச் சென்றுபணிந்து - என்பதும் பாடம். |
|
|