பாடல் எண் :3833

முந்நீர் வலங்கொண் மறைக்காட்டு முதல்வர் கோயில் சென்றிறைஞ்சிச்
செந்நீர் வாய்மைத் திருநாவுக் கரசும் புகலிச் சிவக்கன்றும்
அந்“நேர் திறக்க - வடைக்கÓவெனப் பாடுந் திருவா யிலையணைந்து
நன்னீர் பொழியும் விழியினராய் நாயன் மாரை நினைந்திறைஞ்சி,
86
(இ-ள்) முந்நீர்...இறைஞ்சி - கடல் சூழ்ந்து வலங்கொள்ளும் திருமறைக்காட்டில் எழுந்தருளிய இறைவரது திருக்கோயிலைச் சென்று வணங்கி; செந்நீர்...அணைந்து - செம்மையாகிய நீர்மையினையுடைய வாய்மைபொருந்திய திருநாவுக்கரசரும் சீகாழியில் அவதரித்த சிவக்கன்றாகிய திருஞானசம்பந்தரும் இறைவரது நேர்முகமாகத் திறக்க! அடைக்க! என்று பாடப்பெற்ற அத் திருவாயிலைச் சேர அணைந்து; நன்னீர்...இறைஞ்சி - அருட்கண்ணீர் வழியும் திருவிழிகளையுடை யவர்களாகி அந் நாயன்மார்களிருவரையும் தியானித்து வணங்கி,
(வி-ரை) முந்நீர் - கடல் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழிற்றன்மைகளையும் உடையதனாற் போந்த பெயரென்பர். ஆற்று நீர் - ஊற்று நீர் - வேற்று நீர் என்ற மூன்று நீர்களையும் உடையது என்றும் கூறுவர். முன்னீர் - எனின், முற்பட்ட நீர் என்பர்.
வலங்கொள்ளுதல் - அலைகளாற் சூழ்தல்.
செந்நீர் வாய்மை - செந்நீர் - செம்மைப் பண்பு; சிவமாந் தன்மை செம்மை எனப்படும். “திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்டÓ (திருத்தொண்டத் தொகை) என்றது காண்க; வாய்மை - சத்தாந்தன்மை; சிவனையே யெண்ணுதலும் சொல்லுதலுமாகும் பண்பு; “வாய்மை திறம்பா வாகீசர்Ó (1540); “பெருவாய்மைத் திருநாவுக்கரசர்Ó (2467).
சிவக்கன்று - திருஞானசம்பந்தர்; சிவனது திருமாமகனார்; ஞானப்பாலுண்ட முறைமையினாற் கன்றென்றார்.
நேர் திறக்க - அடைக்க - எனப் பாடும் அத்திருவாயில் என்க; நேர் - இறைவரது திருமுன்புக்கு நேர்முகமாக; அபிமுகம் என்பது வடமொழி வழக்கு; நேர்திறக்க! அடைக்க! எனப் பாடிய வரலாறுகள் அவ்வந்நாயன்மார்களின் சரிதங்களுட் காண்க. முன்வரலாறுகளிற் கண்ட அந்த என அகரம் முன்னறிசுட்டு; திருவாயில் - திருமுன்புள்ள நேர்வாயில்.
நன்னீர்...நினைந்து - விழிநீர் பொழிதல் அந்நாயன்மார்பால் வெளிப்பட்ட இறைவரது திருவருட் பெருமையாகிய வெளிப்பாட்டினை எண்ணி மனமுருகுதலாலாகியது. நன்னீர் - அன்புமிகுதியாலாகிய அருட்கண்ணீராதலின் நன்னீர் என்றார்.
நாயன்மார் - முன்கூறிய அவ்விரண்டு பெருமக்கள். அகரச்சுட்டு தொக்கது.
நினைந்து - தியானித்து; அவர்களைத் தனித்தனியே வணங்கித் திருத்தொண்டத் தொகையிற் றுதித்தருளிய நினைவையும், இங்குத் திருவருள் வெளிப்பாட்டுக் கிலக்காக நின்ற பேரருட் டன்மையினையும், இறைவரது தொர்புடைய அருளின் எளிமையினையும் எண்ணி. நாயன்மார் - தலைவர்.
இறைஞ்சி - நாயன்மாரையும் இறைஞ்சி, அந்நினைவுடன் திருவாயிலினையும் இறைஞ்சி.