பாடல் எண் :3834

நிறைந்த மறைக ளர்ச்சித்த நீடு மறைக்காட் டருமணியை
யிறைஞ்சி வீழ்ந்து பணிந்தெழுந்து போற்றி “யாழைப் பழித்Óதென்னும்
அறைந்த பதிகத் தமிழ்மாலை நம்பி சாத்த, வருட்சேரர்
சிறந்த வந்தா தியிற்சிறப்பித் தனவே யோதித் திளைத்தெழுந்தார்.
87
(இ-ள்) நிறைந்த...போற்றி - நிறைவுடைய வேதங்கள் அருச்சனை செய்த நீடிய திருமறைக்காட்டில் எழுந்தருளிய அருமணி போல்பவராகிய இறைவரைப் பணிந்து நிலம்பொருந்த வீழ்ந்து வணங்கி எழுந்து துதித்து; யாழைப்பழித்து...சாத்த - “யாழைப் பழித்துÓ என்று தொடங்கும் திருப்பதிகத்தினை நம்பிகள் பாடியருளிச்சாத்த; அருட்சேரர்...எழுந்தார் - அருள் பொருந்திய சேரர் பெருமானார் தாம் பாடிய சிறப்புடைய பொன்வண்ணத்தந்தாதியில் இறைவரைச் சிறப்பித்துப் பாடியவற்றையே ஓதித் திளைத்து எழுந்தனர்.
(வி-ரை) நிறைந்த மறைகள் - எங்கும் நிறைந்த நாதசொரூபமாகிய வேதங்கள்.
மறைகள் அருச்சித்த - மணியை - என்க. மறைக ளருச்சித்த வரலாறு தலவிசேடத்துட் காண்க. (III - பக் - 487)
அருமணி - வேண்டிய வேண்டியாங்கு நல்கும் சிந்தாமணி போல்பவர்.
யாழைப்பழித்து என்னும் - பதிகம் - யாழைப் பழித்து என்று தொடங்கும் பதிகம்: அறைந்த - யாழைப் பழித்த மொழியாள் என்ற பொருளை எடுத்து மொழிந்த; யாழைப் பழித்த மொழியம்மை என்பது தல அம்மை பெயர்; “பண்ணினேர் மொழியாளுமைÓ என்பது அரசுகள் திருவாக்கு. அம்மையாரின் மொழியின் இனிமை குறித்தது; இப் பெயர்ப் பயனைத் துய்ப்பாராய இறைவர் அரசுகள் பதிகத்துக்குத் திருக்கதவம் திறக்கத் தாழ்த்தனர் என்ற வரலாறும் கருதுக. வீணாகான தூஷனி என்னும் வடமொழியும் இப்பொருட்டு.
சிறந்த அந்தாதியிற் சிறப்பித்தனவே ஓதி - அந்தாதி - பொன்வண்ணத்தந்தாதி; சிறப்பித்தனவே - அதனுள் திருமறைக்காட் டிறைவரது புகழ்களைப் போற்றிய பாடல்களையே; இரண்டனுருபு தொக்கது; திளைத்து - ஈண்டு வணங்கி என்னும் பொருளில் வந்தது. திளைத்தல் - மகிழ்தலுமாம்.
“துயருந் தொழுமழுஞ் சோருந் துகிலுங் கலையுஞ்செல்லப்
பெயரும் பிதற்று நகும்வெய் துயிர்க்கும் பெரும்பிணிகூர்ந்
தயரு மமர்விக்கு மூரி நிமிர்க்குமந் தோவிங்ஙனே
மயரு மறைக்காட் டிறைக்காட் டகப்பட்ட வாணுதலேÓ