பாடல் எண் :3835

எழுந்து பணிந்து புறத்தெய்தி யிருவர் பெருந்தொண்டருஞ்சிலநாட்
செழுந்தண் பழனப் பதியதனு ளமர்ந்து தென்பாற் றிரைக்கடனஞ்
சழுந்து மிடற்றா ரகத்தியான் பள்ளி யிறைஞ்சி, யவிர்மதியக்
கொழுந்து வளர்செஞ் சடைக்குழகர் கோடிக் கோயில் குறுகினார்.
88
(இ-ள்) எழுந்து...எய்தி - முன்கூறியவாறு திருமுன்பு நின்றும் திளைத்தெழுந்து வணங்கிப் புறம்பே வந்து; இருவர்...அமர்ந்து - இரண்டு பெருமக்களும் சிலநாட்கள் செழிய குளிர்ந்த வயல்கள்சூழ்ந்த அத் திருப்பதியில் விரும்பி எழுந்தருளியிருந்து; தென்பால்...இறைஞ்சி - அங்கிருந்தவாறே, அதன் தெற்கில் உள்ள அலைபொருந்திய கடல் நஞ்சினை உட்கொண்ட கண்டத்தினையுடைய இறைவரது திருவகத்தியான்பள்ளியினைச் சென்று வணங்கி; அவிர் மதியக் கொழுந்து...குறுகினார் - கலைகள் வளரும் பிறையினைச் சூடிய சடையினை யுடைய குழகரது திருக்கோடிக் கோயிலினை அடைந்தனர்.
(வி-ரை) செழுந்தண் பழனப்பதி - கடற்கரைப் பட்டின மாதலாற் கடற்காற்றினாற் குளிர்ச்சி செய்யப்படுவது என்பார் தண் என்றார். “நளிர் வேலைக் கரையினயந் திருந்தா ரன்றேÓ (2787); அதனோடு இந்நகர் சோழநாட்டினைச் சார்ந்ததாதலின் காவிரிநீர் வளமுடைய வயல்களுடைமையாலும் தண்ணியதாம் என்பார் “தண்பழனம்Ó என்றார்; செழுமை - அந்நாளிற் கடற்றுறைமுகமாதலாலும், கப்பல் வாணிப முடைத்தாதலாலும், முத்துக்குளித்தல், உப்பளத் துறைத் தொழில் முதலியவற்றாலும் ஆம்.
அமர்ந்து - அங்கிருந்தபடியே திருவகத்தியான்பள்ளியும் திருக்குழகர் கோடிக் கோயிலும் சென்று வணங்கினர் என்க.
தென்பால் - “மறைக்காடதன் றென்பால்Ó (நம்பி-தேவா-கோடி-10).
நஞ்சு அழுந்தும் மிடறு - அழுந்துதல் - நிலைபெற்றுத் தங்குதல்.
திருஅகத்தியான்பள்ளி - நம்பிகள் பதிகம் கிடைத்திலது!
அவிர்மதியக் கொழுந்து - பிறை; அவிர்தல் - கலைகள் வளர்தல்.
குழகர் - கோடிக் கோயிலின் இறைவரது பெயர்.
கோடிக்கோயில் - சோழநாட்டில் காவிரித் தென்கரையில் கடைசிப் பதியாதலாலும், கடற்கரையில் உள்ளமையாலும், சோழநாட்டுத் தென்கோடி எல்லையாதலாலும் இப்பெயர் பெற்றது.