அங்கு வைகிப் பணிந்தருளாற் போவா ரகன்சோ ணாட்டரனார் தங்கு மிடங்கள் வணங்கிப்போய்ப் பாண்டி நாடு தனைச்சார்ந்து திங்கண் முடியார் திருப்புத்தூ ரிறைஞ்சிப் போந்து சேண்விளங்கும் மங்கு றவழு மணிமாட மதுரை மூதூர் வந்தணைந்தார். | 90 | (இ-ள்) அங்கு...போவார் - அவ்விடத்தில் (திருமறைக் காட்டில்) தங்கிப் பணிந்து திருவருள் விடை பெற்று போவார்களாகி; சோணாட்டு...போய் - சோழ நாட்டில் சிவபெருமானார் விளங்க வீற்றிருந்தருளும் பதிகளை வணங்கிக் கொண்டு மேற் சென்று; பாண்டி நாடுதனைச் சார்ந்து - பாண்டி நாட்டினை அடைந்து; திங்கள்...போந்து - பிறையினைச் சூடிய முடியினை உடைய இறைவரது திருப்புத்தூரினை வணங்கிச் சென்று; சேண்....அணைந்தார் - வானிலே விளங்கும் முகில்கள் தவழ்கின்ற அழகிய மாடங்கள் நிறைந்த மதுரையாகிய தொல் பெரும்பதியில் வந்து அணைந்தார்கள். (வி-ரை) அங்கு - அவ்விடம்; இங்குத் திருமறைக்காட்டினைக் குறித்தது; சிலநாள் அமர்ந்த (3835) பதியதுவாதலானும், அங்குத் தங்கியவாறே திரு அகத்தியான் பள்ளியும் கோடிக்குழகர் கோயிலும் சென்று பணிந்து மீண்டார்களாதலானும், குழகர் கோடிக் கோயிலிற் அயலிற்குடிகள் ஒன்றுமில்லையாதலானும், அங்கு என்றது குழகரை வணங்கி மீண்ட திருமறைக் காட்டினைக் குறித்ததாம். வைகி என்றதும் காண்க. அருளால் - அருள் விடைபெற்று. சோணாட்டு - இடங்கள் - சோழ நாட்டிற் தெற்கிலும் மேற்கிலும் எஞ்சிய பதிகள்; இவை திருக்கடிக்குளம், திருவிடும்பாவனம், திருவுசாத்தானம் முதலாயின என்பது கருதப்படும். நாயன்மார்கள் திருமறைக் காட்டுக்குச் சென்ற வழி அங்கு நின்றும் பட்டுக்கோட்டை அறந்தாங்கிச் (இஃது அரண்தாங்கி என்றதன் மரூஉ வழக்கு என்பர் ஆராய்ச்சியாளர்) சாலை என்பது கருதப்படுதலின் இப்பதிகளே சோணாட்டில் வணங்க நின்றன என்பதாம். ஆளுடைய பிள்ளையார் சென்றருளிய வழிகள் பற்றி முன் 2522 முதல் 2529 வரை உரைத்தவை இங்கு நினைவு கூர்தற் பாலன. இவற்றிற்கு நம்பிகள் பதிகங்கள் கிடைத்தில! பாண்டிநாடு தனைச் சார்ந்து - பாண்டிநாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் முன்னை நாளில் எல்லையாகக் கண்டது தென்வெள்ளாறென் றறியப்படுதலின் அறந்தாங்கியின் சிறிது வடக்கில் வெள்ளாற்றினைக் கடந்து குன்றக்குடி வழியாகத் திருப்புத்தூரினை அடைந்தனர் என்பது கருதப்படும். திருப்புத்தூர் - இறைஞ்சி - இதற்கும் நம்பிகள் பதிகம் கிடைத்திலது!. போந்து - மதுரைமூதூர் அணைந்தார் - எனப்படுதலால் ஆளுடைய பிள்ளையார் திருப்புத்தூரினின்றும் வடமேற்கு நோக்கிச் சென்று திருக்கொடுங்குன்றத்தினை வணங்கிப் போந்தது போலச் செல்லாது, இந்நாயன்மார்கள் திருப்புத்தூரினின்றும் நேரே தென்மேற்கு மேலூர்ச் சாலை வழியாக மதுரைக்கு எழுந்தருளினர் என்பது கருதப்படும். சேண்விளங்கு மங்குல் தவழும் மணிமாடம் - சேண் - விசும்பு; விண்; ஆகாயத்தில் விளங்கும் முகில்கள் தவழும்படி மாடங்கள் விளங்குதல் மாடங்களின் உயர்ச்சியைக் குறித்தன. “மாடம் விண்டாங்குவ போலும். (பிள். தேவா). சேண் - சேணில்; சேய்மையில் என்றலுமாம். சேண் விளங்கு மங்குல் என்றதில் சேண் விளங்கும் என்றது பிறிதினியைபு நீக்கிய விசேடணம்; கடற்கரையின் மங்குல் கடல்பருகிக் கடற்கரை தவழ வுள்ளனவாதலின் அவற்றை நீக்கச் சேண்விளங்கு என்றார். “குரைவிரவிய குலசேகரக் கொண்டற்றலைÓ (நம்பி தேவா. திருமறைக்காடு - 4); நான்மாடக்கூடலான திருவிளையாடற் சரிதக் குறிப்பும் காண்க. |
|
|