பாடல் எண் :3838

சேரமான் றோழருமச் சேரர்பிரா னும்பணிப்பூண்
ஆரமார் பரைமதுரை யாலவா யினில்வணங்க
வாரமா வந்தணைய வழுதியார் மனக்காதல்
கூரமா நகர்கோடித் தெதிர்கொண்டு கொடுபுக்கார்.
91
(இ-ள்)சேரமான்றோழரும்...வந்தணைய - சேரமான்றோழராகிய நம்பிகளும் சேரர்பிரானாரும், பாம்பினைப் பூணும் ஆரமாகவுடைய மார்பராகிய சிவபெருமானை மதுரைத் திருவாலவாயில் வணங்கும் பொருட்டு அன்பினுடனே வந்தணைய; வழுதியார்...கொடுபுக்கார் - பாண்டியமன்னர் பெரிய மனவிருப்பம் மிக மாநகரத்தினை அலங்கரித்து எதிர்கொண்டுசென்று அழைத்துக்கொண்டு நகரத்தினுட் புகுந்தனர்.
(வி-ரை) சேரமான்றோழர் - நம்பிகள்; 3813 பார்க்க. பணிப்பூண் ஆரமார்பர் - இறைவர்; பணி - பாம்பு; பணியினைப் பூணும் ஆரமாகக் கொண்ட மார்பர். பணத்தை யுடையது பணி. பணி - படம்; வடமொழி பணியினையும் பூண்ஆரங்களையும் பூண்ட மார்பர் என்றலுமாம்; இறைவரே அரசராக இருத்தலின் இவ்வாறு கூறலும் பொருந்தும்.
வாரம் - அன்பு; வாரமா - மிக்க அன்புடனே.
வழுதியார் - பாண்டியர்; காதல்கூர - பெரு விருப்பம் மேலும் மிகுதலினாலே.
கோடித்தல் - அலங்கரித்தல்.
சேரனாரும் பணிப்பூண் - என்பதும் பாடம்.