பாடல் எண் :3839

தென்னவர்கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரே
தொன்மதுரை நகரின்க ணினிதிருந்த சோழனார்
அன்னவர்க ளுடன்கூட வணையவவ ருங்கூடி
மன்னுதிரு வாலவாய் மணிக்கோயில் வந்தணைந்தார்.
92
(இ-ள்) தென்னவர்கோன்...உடன்கூட பாண்டியனாரது மகளாரை மணந்து முன்னமே தொன்மையுடைய மதுரை நகரத்தில் வந்து இனிதாக இருந்த சோழமன்னரும் அவர்களுடன் கூடச் சேர; அவரும் கூடி...வந்தணைந்தார் - அவர்களும் ஒருங்கு சேர்ந்து நிலைபெற்ற திருவாலவாய் என்கின்ற அழகிய கோயிலினை வந்து சேர்ந்தனர்.
(வி-ரை) தென்னவர்கோன்...சோழனார் - பாண்டியரது மகளாரை மணஞ் செய்திருந்தமையால் அச்சுற்றத் தொடர்பு பற்றிச் சோழ மன்னர் முன்னமே மதுரையில் வந்திருந்தனர் என்பதாம். திருவேட்டு - மணம் செய்து.
சோழனார் - உடன்கூட - அவரும்கூடி - சோழனார் வந்து உடன் சார நம்பிகளும் சேரனாரும் பாண்டியருமாக ஒருங்கு கூடி.
மணிக்கோயில் - அழகிய திருக்கோயில்; ஆலவாய் என்பது கோயிலின் பெயர்; பாம்பு வளைந்து எல்லை காட்டக் கண்டமையால் இப்பெயர் பெற்றது; அப்பாம்பின் மணியினால் முன் அணிசெய்த என்பதும் குறிப்பு.