திருவால வாயமர்ந்த செஞ்சடையார் கோயில்வலம் வருவார்முன் வீழ்ந்திறைஞ்சி வன்றொண்டர் வழித்தொண்டு தருவாரைப் போற்றிசைத்துத் தாழ்ந்தெழுந்து வாழ்ந்ததமிழ்ப் பெருவாய்மை மலர்புனைந்து பெருமகிழ்ச்சி பிறங்கினார். | 93 | (இ-ள்) வன்றொண்டர் - வன்றொண்டராகிய நம்பிகள்; திருவாலவாயமர்ந்த...இறைஞ்சி - திருவாலவாயில் விரும்பி வீற்றிருந்தருளிய சிவந்த சடையினையுடைய இறைவரது திருக்கோயிலினை வலமாக வருவாராய் முன் விழுந்து வணங்கி; வழித்தொண்டு...எழுந்து - வழிவழியாளாய்த் தொண்டு புரியும் பேற்றினைத்தந் தருளுவாராகிய இறைவரைத் துதித்து நிலமுற விழுந்து எழுந்து; வாழ்ந்த...பிறங்கினார் - வாழ்வடைந்த பெருவாய்மையினை யுடைய தமிழ்ப் பாமலர் மாலை புனைந்து பெருமகிழ்ச்சியின் விளங்கினார். (வி-ரை) திருவாலவாயாரை வணங்க வந்த இருபெரு மக்களுள் வன்றொண்டரது வழிபாடு இப்பாட்டாற் கூறப்பட்டது; சேரனார் வழிபட்டநிலை மேல்வரும் பாட்டிற் கூறப்படுதல் காண்க. வழித்தொண்டு தருவார் - இறைவர்; "யானு மென்பால் வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு செய்தற் கோலை" (205) என்றெழுதிய அற்புதப் பழஆவணங்காட்டித் தொண்டிலே கூட்டினாராதலின் இவ்வாற்றாற் கூறினார். வாழ்ந்த தமிழ்ப் பெருவாய்மை மலர் - செந்தமிழ் திருப்பதிகம். நம்பிகள் அருளிய அப்பதிகம் கிடைத்திலது! பெருமகிழ்ச்சி பிறங்குதலாவது பெரு மகிழ்ச்சி மீதூர விளங்குதல். |
|
|