செம்பியனா ருடன்செழியர் தாம்பணிந்து சேரருடன் நம்பியுமுன் புறத்தணைய நண்ணியபே ருவகையால் உம்பர்பிரான் கோயிலினின் றுடன்கொடுபோ யிருவருக்கும் பைம்பொன்மணி மாளிகையிற் குறைவறுத்தார் பஞ்சவனார். | 95 | (இ-ள்) செம்பியனார்....பணிந்து - சோழருடனே பாண்டியரும் இறைவரை வணங்கி; சேரருடன்...அணைய - சேரனாருடனே நம்பிகளும் திருக்கோயிற் புறத்திலே சேர; நண்ணிய...போய் - பொருந்திய பெருங்களிப்பினாலே தேவதேவரது திருக்கோயிலினின்றும் தம்முடன் அழைத்துக் கொண்டு போய்; இருவருக்கும்...பஞ்சவனார் - பாண்டியர், இருபெரு மக்களுக்கும் அழகிய பொன் பூண்ட தமது மாளிகையிலே குறைவறுத்து வேண்டியவாறு உபசரித்தனர். (வி-ரை) செம்பியனார் - சோழ மன்னர். (3839) செழியர் - பாண்டியர்; தாம்பணிந்து - தாங்களும் இறைவரை வணங்கி. புறத்து - திருக்கோயிற் புறமுற்றத்திலே. இருவர் - நம்பிகளும் சேரனாரும். பைம்பொன் மணிமாளிகை - இருவருக்கும் பாண்டியர் அமைந்த தனியிடமாகிய திருமாளிகை. “தாமிருந்த இடம்Ó (3843) என இதனைப் பாண்டியரது அரண்மனையின் வேறு பிரித்து மேற்கூறுதல் காண்க. குறைவறுத்தல் - உணவு, உறையுள், மற்றும் வேண்டத் தக்கவையாகிய குறைகள் இவைகளை இல்லையாகச் செய்தல்; குறைவின்றி உபசரித்தல். பஞ்சவனார் - பாண்டிய மன்னர். செம்பியனாருடன் செழியர் - என்றும், சேரருடன் நம்பியும் - “இருவருக்கும்Ó என்றும் பிரித்துக் கூறியது உபசரித்தோரையும் உபசரிக்கப்பட்டோரையும் வேறு வேறு உணர்த்துதற்பொருட்டு. உபசரித்தோர் இருவருள்ளும் பாண்டியனாரே இடத்தின் உரிமையாளராதலின் அவரை வேறுபிரித்துக் குறைவறுத்தார் பஞ்சவனார் என்றார். |
|
|