உளமகிழக் கும்பிட்டங் குறையுநா ளுதியருடன் கிளரொளிப்பூண் வன்றொண்டர் தாமிருந்த விடங்கெழுமி வளவனார் மீனவனார் வளம்பெருக மற்றவரோ டளவளா வியவிருப்பா லமர்ந்துகலந் தினிதிருந்தார். | 96 | (இ-ள்) உளமகிழ....நாள் - மனங்களிப்ப இறைவரைக் கும்பிட்டு அப்பதியில் தங்கிய நாட்களிலே; உதியருடன்...கெழுமி - சேரனாருடனே வன்றொண்டர் தாம் தங்கியிருந்த இடத்தினைச் சேர்ந்து; வளவனார்.....இனிதிருந்தார் - சோழரும் பாண்டியரும் வளங்கள் பெருகும்படிச் சார்ந்து அவர்களோடு அளவளாவிக் கலந்த விருப்பத்தினால் அமர்ந்து கூடி இனிதிருந்தனர். (வி-ரை) உதியர் - சேரர். தாமிருந்த இடம் - நம்பிகள் சேரருடன் தங்கியிருந்த மாளிகையாகிய தனியிடம். கெழுமுதல் - சார்தல்; சோழரும் பாண்டியரும் ஆகிய இருவரும் நம்பிகள் சேரருடனிருந்த இடத்திற்கு வந்து அளவளாவி விரும்பி மகிழ்ந்தனர் என்பதாம்; இஃது உபசரிக்கப் பட்டோர்க்குரிய உபசரிப்பு மரபுகளுள் ஒன்று. அரசர் - பெரியோர்கள் - பால், உலக நிலையில் இவ்வழக்குப் பெரிதும் போற்றப் படுதல் காண்க. பேரரசின் அமைச்சராதலின் ஆசிரியர் மும்முடி மன்னர்கள் கூடிய கூட்டத்தின் இம்மரபு வழக்கினை உலகுக்கு அறிவுறுத்திக் காட்டியருளினர். வளம்பெருக - இவ்வாறு போந்த நட்பினால் இருவர் நாட்டினும் உலகியல் அரசாட்சிச் சார்பில் வாணிகம் முதலாக பல துறையின் வளங்களும் பெருக நிகழும் பொருட்டு. இனி அன்பினியலிலும் சிவன் பாலன்பாகிய வளம் இருபாலும் அன்புரிமையால் அடியராந் திறத்திற் பெருக என்றலுமாம். அமர்தல் - விரும்பியிருத்தல்; கலத்தல் - உணர்ச்சிவகையால் உள்ளங் கூடுதல். இனிதிருந்தார் - வளவனாரும் மீனவனாரும். அவர் - நம்பிகளும் சேரனாரும். மற்று - அசை. இப்பாட்டினால் சோழபாண்டியர் இப் பெருமக்களின் வருகையினைப் போற்றிப் பெற்ற பண்பும் பயனும் கூறப்பட்டது. |
|
|