அந்நாளின் மதுரைநகர் மருங்கரனா ரமர்பதிகள் பொன்னார மணிமார்பிற் புரவலர்மூ வரும்போதச் செந்நாவின் முனைப்பாடித் திருநாடர் சென்றிறைஞ்சிச் சொன்மாலை களுஞ்சாத்தித் தொழத்திருப்பூ வணத்தணைந்தார். | 97 | (இ-ள்) அந்நாளில்...பதிகள் - அந்நாட்களில் மதுரைப் பதியின் பக்கத்தில் இறைவர் விளங்க எழுந்தருளிய பதிகளை; பொன்...போத - பொன் ஆரங்களும் மணிகளும் பூண்ட மார்பினையுடைய முடிவேந்தர்கள் மூவரும் உடன் வர; செந்நாவின்..தொழ - செம்மை விளங்கும் நாவினையுடைய திருமுனைப்பாடித் திருநாட்டின் தலைவராகிய நம்பிகள் சென்று வணங்கித் திருப்பதிகங்களைப் பாடிச்சாத்தித் தொழுவதற்கு எழுந்து; திருப்பூவணத்தணைந்தார் - திருப்பூவணத்தினைச் சேர்ந்தனர். (வி-ரை) அந்நாளில் - முன் கூறியபடி இனிதிருக்கும் அந்நாட்களில். நாடர் - பதிகள் - சென்று - தொழ - மூவரும் - உடன். போதத் - திருப்பூவணத்தை யணைந்தனர் - என்று கூட்டுக. திருநாடர் தொழ - மூவரும் உடன் போத - பரமாசாரியராதலின் நம்பிகள் தொழ, வேந்தர்கள் பின்றொடர்ந்து உடன் சென்றனர் என்க. அன்றியும் பாண்டி நாட்டு யாத்திரையினை நம்பிகளே முறைமையால் நினைந் தெழுந்தனர்; அவரைப் பிரியாமைப் பொருட்டும் தமக்குத் திருமுகங் கொடுத்தருளிய கருணையின் பொருட்டும் அவருடன் செல்லச் சேரனார் துணிந்து உடன் போந்தனர்; இவ்விருவரையும் கண்டு உபசரித்துத் தம் நாட்டெல்லை யளவும் உடனிருத்தற் பொருட்டுப் பாண்டியனாரும் அவரது தொடர்பினாற் சோழனாரும் உடன் போந்தனர். எனவே நம்பிகளின் பொருட்டே இத்தலயாத்திரை நிகழ்வதாதலின் அவர் தொழ, மன்னர் மூவரும் உடன் போத என்று பிரித்துக் கூறியருளினார்; இனம்பற்றி முடிவேந்தர் மூவரையும் ஒருங்கு சேர்த்துக் கூறினார். திருப்பூவணத்து அணைந்தனர் - திருப்பூவணம் அந்நாளில் உலகியலிலும் சிறந்த பெருநகராக விளங்கிற்று; அன்றியும் மூவேந்தர்களும் தத்தம் உரிமையுடன் சென்று வணங்கும் பொதுத் தலமாகவும் விளங்கியதெனக் கருத இடமுண்டு; “கூடல் மாணிக்கம்Ó என்ற மலைநாட்டுப்பதி இந்நாளில் விளங்குதல் போலக் கொள்க. “முறையால் முடிசேர் தென்னர் சோழர் சேரர்க டாம் வணங்கும், திறையார் ஒளி சேர் செம்மை விளங்குந் தென்றிருப் பூவணமேÓ (1) “கழன் மன்னர் காத்தளித்தÓ (2) “ஆரா அன்பிற் றென்னர் சேரர் சோழர்கள் போற்றிசைப்பÓ (5) என வரும் பிள்ளையார் பதிகத் திருவாக்குக்கள் காண்க. (2785ல்) முன் உரைத்தவையும் பார்க்க. பாண்டி நாட்டில் மதுரையினை யடுத்து இதனையே முதலிற் சென்று மும்மன்னரும் போற்றியதற்கு இது காரணம் போலும். இங்கு இறைஞ்சிய பின் இங்குநின்றும் நேரே மதுரைக்கு மீண்டருளியதும் (3847) காண்க. |
|
|