பாடல் எண் :3845

நீடுதிருப் பூவணத்துக் கணித்தாக நேர்செல்ல
மாடுவருந் திருத்தொண்டர் மன்னியவப் பதிகாட்டத்
தேடுமறைக் கரியாரைத் “திருவுடையாÓ ரென்றெடுத்துப்
பாடிசையிற் “பூவணமீ தோ?Ó வென்று பணிந்தணைவார்.
98
(இ-ள்) நீடு...காட்ட - நீடுகின்ற திருப்பூவணத்துக்கு அணிமையில் நேரே செல்லும் போது பக்கத்தில் வருகின்ற திருத்தொண்டர்கள், நிலைபெற்ற அத்திருப்பதியினைக் காட்ட; தேடும்....எடுத்து - தேடுகின்ற வேதங்களுக்கும் எட்டுதற்கரிய இறைவரைத் “திருவுடையார்Ó என்று தொடங்கி; பாடு...அணைவார் - பாடுகின்ற இசை பொருந்திய திருப்பதிகத்தில் “பூவணமீதோ?Ó என்று போற்றி வணங்கி அணைவாராகி,
(வி-ரை) நீடு - அருட்செல்வமும் பொருட் செல்வமும் நீடுகின்ற.
அணித்தாக நேர் செல்ல - அணிமையில் சென்றபொழுது.
பதிகாட்ட - “பூவண மீதோ?Ó என்ற பதிகத்தால் அதன்புறம்பு நின்று அதனை நோக்கி வரும் வழியிற்பாடிய குறிப்பு விளங்குமாறு காண்க. “இடைமருதீதோ?Ó “நனிபள்ளி போலும்Ó (தேவா).
மறைக்கரியாரை - என்று எடுத்துப் - பூவணமீதோ? என்று பாடினார் - பூவணமீதோ என்று பதியினைப் போற்றிய தன்மையில் அமையப் பாடினும் அஃது இறைவரைப் போற்றியபடியேயாம் என்பது; அரியாரைப் - பாடி - என்க.
“திருவுடையார்Ó என்று எடுத்து - எடுத்தல் - தொடங்குதல்; இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு.
இசை - இசையினையுடைய பதிகம் என்ற பொருளில் வந்தது. இசை - பதிகப் பண்ணாகிய இந்தளம்.
பணிந்து - பதியினை வணங்கி.
அணைவார் - முற்றெச்சம்; அணைவாராகிச் - சென்று - என மேல் வரும்பாட்டுடன் கூட்டி உரைத்து முடித்துக் கொள்க.
பகர்ந்தணைந்தார் - என்பதும் பாடம்.