சென்றுதிருப் பூவணத்துத் தேவர்பிரான் மகிழ்கோயில் முன்றில்வலங் கொண்டிறைவர் முன்வீழ்ந்து பணிந்தெழுந்து நின்றுபர விப்பாடி நேர்நீங்கி யுடன்பணிந்த வென்றிமுடி வேந்தருடன் போந்தங்கண் மேவினார். | 99 | (இ-ள்) சென்று...வலங்கொண்டு - சென்று திருப்பூவணத்தில் தேவர்களின் தலைவராகிய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருக்கோயிலின் திருமுற்றத்தினை வலங்கொண்டு; இறைவர்...நீங்கி - இறைவரது திருமுன்பு நிலமுற விழுந்து வணங்கி எழுந்து நின்று துதித்துப் பாடி அங்கு நின்றும் நீங்கி; உடன் பணிந்த...மேவினார் - தம்முடன் வந்த வெற்றியினையுடைய முடி மன்னர்கள் மூவருடனே கூடிச் சென்று அப்பதியிற்றங்கினார் (வன்றொண்டர்). (வி-ரை) கோயில்...பாடி - வழிபாட்டு முறை; வன்றொண்டர் என்ற எழுவாய் முன்பாட்டிலிருந்து வருவிக்க. பாடி - திருமுன்பு பாடியருளிய நம்பிகளது இத்திருப்பதிகம் கிடைத்திலது! “திருவுடையார்Ó என்ற பதிகம் பதியின் புறத்தே அதனைக் கண்ட இடத்தில் நின்று பதியினைப்பாடியது. நேர்நீங்கி - நேர் - திருமுன்பினின்றும்; ஐந்தனுருபு தொக்கது. உடன்பணிந்த - வேந்தர் - “புரவலர் மூவரும்Ó (3844); மூவேந்தரும் இப்பதியிற் பணியும் உரிமைச் சிறப்பு ஆளுடைய பிள்ளையார் பதிகத்துட் காண்க. போந்து - புறம்போந்து; அங்கண் - அத்திருப் பதியில். |
|
|