பாடல் எண் :3847

அப்பதியி லமர்ந்திறைஞ்சிச் சிலநாளி லாரூரர்
முப்பெருவேந் தர்களோடு முதன்மதுரை நகரெய்தி
மெய்ப்பரிவிற் றிருவால வாயுடையார் விரைமலர்த்தாள்
எப்பொழுதும் பணிந்தேத்தி யின்புற்றங் கமர்கின்றார்.
100
(இ-ள்) அப்பதியில்...சில நாளில் - திருப்பூவணமாகிய அத்திருப்பதியில் விரும்பி எழுந்தருளி இறைவரை வணங்கியிருந்து பின் சில நாட்களில்; ஆரூரர்....எய்தி - நம்பி ஆரூரர் பெருவேந்தர் மூவர்களுடனே முதன்மையுடைய மதுரையம்பதியினைச் சேர்ந்து; மெய்ப்பரிவில்.....ஏத்தி - உண்மை கூர்ந்த பேரன்பினாலே திருவாலவாயுடைய பெருமானது மணமுடைய மலர் போன்ற திருவடியை எப்பொழுதும் பணிந்து துதித்து; இன்புற்று அங்கு அமர்கின்றார் - இன்பமடைந்து அவ்விடத்தில் விரும்பி எழுந்தருளியிருக்கின்றாராய்,
(வி-ரை) அப்பதி - திருப்பூவணம்.
முதன் மதுரை - முதன்மை பெற்ற. பாண்டி நாட்டுத் தலைநகராகிய என்றலுமாம். “மதுரையீ ததிக மெந்த, முறையினா லென்னின் முன்னர்த் தோன்றிய முறையால்Ó (திருவிளை - புரா - வெள்ளியம்பலத் திருக்கூத் தாடிய படலம் - 7) என்றும், “முளைத்தானை யெல்லார்க்கு முன்னே தோன்றிÓ (தேவா) என்றும் கூறுமாற்றால் முதலிற்றோன்றிய மதுரை என்ற குறிப்புமாம்.
எப்பொழுதும் - வழிபடும் காலங்களில் எல்லாம்.
மெய்ப்பரிவிற் - பணிந்து ஏத்தி - என்க. மெய்ப்பரிவாவது உண்ணிறைந்து இடையறாது பெருகும் பேரன்பு; மெய்ப்பரிவு - இயற்கை யடை.
அமர்கின்றார் - முற்றெச்சம். அமர்தல் - விரும்பி யிருத்தல். அமர்கின்றாராய் - நண்ணியே - என மேல்வரும் பாட்டுடன் கூட்டி யுரைத்துக் கொள்க.