பாடல் எண் :3848

செஞ்சடையார் திருவாப்ப னூர்திருவே டகமுதலா
நஞ்சணியுங் கண்டரவர் நயந்தபதி நண்ணியே
எஞ்சலிலாக் காதலினா லினிதிறைஞ்சி மீண்டணைந்து
மஞ்சணையு மதின்மதுரை மாநகரின் மகிழ்ந்திருந்தார்.
101
(இ-ள்) செஞ்சடையார்.......நண்ணியே - சிவந்த சடையினையுடைய இறைவரது திருஆப்பனூர், திருவேடகம் முதலாக விடத்தினைக் கொண்ட கண்டத்தினை உடைய பெருமான் விரும்பி வீற்றிருக்கும் பதிகளில் சென்று; எஞ்சலிலா...இறைஞ்சி - குறைவில்லாத பெருவிருப்பினால் இனிதாக வணங்கி; மீண்டு...இருந்தார் - மீண்டும் முகில்தோயும் மதிலினையுடைய மதுரை நகரின் கண்ணே சேர்ந்து மகிழ்ந்து எழுந்தருளியிருந்தனர். (வன்றொண்டர்).
(வி-ரை) திருவாப்பனூர் - திருவேடகம் முதலாபதி - மதுரையினின் வடக்கும் மேற்கும் நோக்கிச் சென்று பாண்டி நாட்டுப் பதிகளை வணங்கினர் என்பது; திருப்பூவணம் கிழக்கில் உள்ளது; முதலாம் - - இவை திருவாதவூர் - சோலைமலை முதலாயின என்பது கருதப்படும்.
மீண்டணைந்து - என்றதனால் மதுரையினை விட்டு நீண்டதூரம் செல்லாது உடனுடன் மதுரைக்கு மீண்டனர் என்பதறியப்படுதலானும், பாண்டியரும் சோழரும் உடன் வருதலானும் நெடுந்தூர மாகிய பதிகளிற் செல்லவில்லை என்பதாம். அவை பின்னர்க் (3852) காணப்பெறும்.
மஞ்சணையும்...இருந்தார் - இவ்வடி முற்றுமோனை; மதில் - “கபாலிநீள் கடிம் மதில்Ó (தேவா).
இருந்தார் - வன்றொண்டர் என்ற எழுவாய் வருவிக்க.