பாடல் எண் :3849

பரமர்திருப் பரங்குன்றிற் சென்றுபார்த் திபரோடும்
புரமெரித்தார் கோயில்வலங் கொண்டுபுகுந் துள்ளிறைஞ்சிச்
சிரமலிமா லைச்சடையார் திருவடிக்கீ ழாட்செய்யும்
அருமைநினைந் “தஞ்சுதுÓமென் றாரூரர் பாடுவார்.
102
(இ-ள்) பரமர்...இறைஞ்சி - மூவேந்தர்களுடனே இறைவரது திருப்பரங்குன்றிலே போய்த் திரிபுரமெரித்த பெருமானது திருக்கோயிலினை வலமாக வந்து உள்ளே புகுந்து வணங்கி; சிரமலி...பாடுவார் - வெண்டலைகள் மலிந்த மாலையினை யணிந்த சடையவரது திருவடியின் கீழே ஆட் செய்யும் அருமைப் பாட்டினை எண்ணி அஞ்சுதும் என்ற கருத்துடன் திருஆரூரர் பாடுவாராகி,
(வி-ரை) பார்த்திபர் - அரசர்கள்; பிருதுவியைத் தம் உடைமையாக உடைமையால் மண்ணாளும் அரசர் பார்த்திபர் எனப்படுவர்; “மண்ணாளு மன்னவர்க்கு மாண்பாகிÓ (திருவா).
சிரமலி மாலை - சிரங்கள் நிறையக் கோத்தமாலை; தலைமாலை. சிரம் - வெண்டலை.
ஆட்செய்யும் அருமை நினைந்து அஞ்சுதும் என்று - இது பதிகக்கருத்து; "அடி கேளுமக் காட்செய வஞ்சுதுமேÓ என்பது பதிகத்தின் மகுடம்; “அடிகேளுமக்காட்செயவஞ்சுது மென்றமரர் பெருமானை யாரூரனஞ்சி...மொழிந்தÓ (10) என்று திருக்கடைக்காப்பில் நம்பிகள் தாமே பதிகக் கருத்துரைத்தல் காண்க; அருமை நினைந்து அஞ்சுதும் என்று - அஞ்சுதும் என்பது ஆட்செய்வதின் அச்சமென்பதன்று; அதன் அருமைப் பாட்டினை எண்ணித் துதித்தபடியேயாம் என்று அஞ்சுதும் என்பதன் கருத்தினை ஆசிரியர் எடுத்துக் காட்டியருளினர்.
பாடுவார் - பாடுவாராகி; முற்றெச்சம்; பாடுவார் - எடுத்து என மேல்வரும் பாட்டுடன் கூட்டி மேல் வினைமுடிபு தந்து உரைத்துக் கொள்க.