இறைவர்திருத் தொண்டுபுரி யருமையினை யிருநிலத்து முறைபுரியு முதல்வேந்தர் மூவர்களுங் கேட்டஞ்சி மறைமுந்நூன் மணிமார்பின் வன்றொண்டர் தமைப்பணிந்தார் நிறைதவத்தோ ரப்பாலு நிருத்தர்பதி தொழநினைந்தார். | 104 | (இ-ள்) இறைவர்...கேட்டஞ்சி - சிவபெருமானது திருத்தொண்டு செய்யும் அருமைப்பாட்டினை இப்பெரிய உலகில் அரசாட்சிபுரியும் முதல் முடிமன்னர்களாகிய அரசர்கள் மூவர்களும் கேட்டுத் தாமும் அஞ்சி; மறை முந்நூல்....பணிந்தார் - வேதங்களில் விதித்த முந்நூல் அணிந்த அழகிய திருமார்பினை உடைய வன்றொண்டப்பெருமானைப் பணிந்தார்கள்; நிறைதவத்தோர்.... நினைந்தார் - நிறைந்த தவத்தினையுடைய நம்பிகள் அப்பாலும் உள்ள இறைவரது பதிகளையும் சென்று தொழுவதற்கு நினைந்தருளினர். (வி-ரை) திருத்தொண்டு புரி அருமையினை மூவர்களும் - கேட்டஞ்சி - இறைவர் திருத்தொண்டு செய்தல் எளிய காரியமன்று; மிகஅருமைப் பாடுடையது என்று கேட்டு முடிமன்னர்கள் மூவரும், நம்பிகள் “அஞ்சுதுமேÓ என்று துதித்தது போலவே தாமும் அஞ்சித் துதித்தனர்; அருமையாவது இறைவரது பெருமைகளையும், எமது மிக்க சிறுமையினையும், அவர் எமது சிறுமைகளையும் பிழைகளையும் நோக்காது இடையறாது செய்யும் பொருங்கருணையினையும் எண்ணி வழிபடுதலின் அருமை. இறைவர் உருவத் திருமேனி தாங்குவதும் அத்திருமேனில் ஆறு பாம்பு மதி முதலியவற்றை அணிவதும், தம்மை வந்தடைந்த உயிர்கள்மேல் வைத்த கருணையின் பொருட்டேயா மென்பதனை அறிந்து, வழிபடாது அஞ்சுவது கூடாதென்று இரங்கி அறுவுறுத்திய குறிப்புமாம். முதல் வேந்தர் மூவர் - இம் மூவேந்தர்களின் மரபுகள் படைப்புக் காலந்தொட்டு. அயனாற் படைக்கப்பட்டன என்று கூறும் ஆசிரியர்களின் கருத்தும் முதல் என்றதனாற் குறிக்கப்பட்டது. முதல் - வேறு மன்னருக்குக் கீழ்ப்படாத தனிமுடி மன்னராந் தன்மை. இருநிலத்து முறைபுரியும் - என்றதனால் அம்மூவேந்தர்களும் அந்நாளில் நாடாண்டனர் என்றதாம். நம்பிகள் காலமாகிய 9-10ம் நூற்றாண்டுகளில் இம்மூன்று அரசமரபுகளும் வல்லரசுகளாய் நாடாண்டன என்பது நாட்டுச் சரிதவரலாற்றான் அறியப்படும்; முறைபுரியும் என நிகழ்காலத்தாற் கூறுதல் காண்க; ஆசிரியர் காலத்தும் அந்நிலை ஒருவாற்றால் நின்றதாகும். வன்றொண்டர் தமைப்பணிந்தார் - தமது பரமாசாரிய மூர்த்திகளாகக் கொண்டு வணங்கினர். நிறைதவத்தோர் - நம்பிகள்; அப்பாலும் - இவை பாண்டி நாட்டில் மேலும் தெற்கிலும் தென்கிழக்கிலுமுள்ள குற்றாலம் முதலாயினவை; மேல் வரலாறுபார்க்க. கேட்டிறைஞ்சி - கேட்டருளி - என்பனவும் பாடங்கள். |
|
|