பாடல் எண் :3852

அந்நாட்டுத் திருப்பதிகள் பிறவுமணைந் திறைஞ்சமலை
நன்னாட்டு வேந்தருட னம்பிதா மெழுந்தருள,
மின்னாட்டும் பன்மணிப்பூண் வேந்தரிரு வருமீள்வார்
தென்னாட்டு வேண்டுவன செய்தமைப்பார் தமைவிடுத்தார்.
105
(இ-ள்) அந்நாட்டு...எழுந்தருள - அந்நாட்டில் அருகில் உள்ள திருப்பதிகள் பிறவற்றையும் சென்று வணங்க நன்மை யுடைய மலைநாட்டரசராகிய சேரலனாருடனே நம்பிகள் எழுந்தருள; மின்னாட்டும்...மீள்வார் - ஒளி விளங்கும் பல மணிகளிழைத்த பூண்களை அணிந்த சோழ பாண்டியர்களாகிய இருபெரு வேந்தரும் மதுரைக்கு மீள்வாராகி; தென்னாட்டு...விடுத்தர் - தென் நாட்டிலே அவர்களுக்கு வேண்டுவனவற்றைச் செய்தமைத்தற் குரிய பரிசனங்களை உடன் செல்ல ஏவி விடுத்தனர்.
(வி-ரை) அந்நாட்டுத் திருப்பதிகள் பலவும் - இவை திருக்குற்றாலம், திருநெல்வேலி முதலாயின.
அணைந்திறைஞ்ச - எழுந்தருள - என்று கூட்டுக. இறைஞ்ச - இறைஞ்சும் பொருட்டு; எழுந்தருள - மேற்கொண்டு செல்ல ஒருப்பட.
இருவரும் மீள்வார் - அதுவரை உடன்வந்து உபசரித்த சோழரும் பாண்டியரும் மதுரைக்கு மீள்வாராகி; அணிமையான பதிகளில் இதுவரை உடனிருந்து உபசரித்த இவர்கள் மேலும் தென்னாட்டில் முழுமையும் உடனிருத்தல் இயலாமையால் உலகியல் பற்றியும் அரசகாரியத்தின் பொருட்டும் மதுரைக்குமீள்பவர்களாகி உரிய பரிசனங்களை வேண்டுவன செய்தமைக்க ஏவி விடுத்தனர் என்க. மீள்வார் - மீள்வாராகி.
மீள்வார் - விடுத்தார் - என்று கூட்டுக.
இறைஞ்சி - என்ற பாடம் பிழை.
தென் நாட்டு - மேலும் தெற்கில் உள்ள பாண்டி நாட்டுப் பதிகள்.
செய்தமைப்பார் - செய்தற்கும் அமைத்தற்கும் உரிய பரிசனங்களினாள், செய்வோர்; பணியாளர் - அமைப்பார் - நியமிப்போர்.
பதிகள் பலவும் - என்பதும் பாடம்.