பாடல் எண் :3853

இருபெருவேந் தருமியல்பின் மீண்டதற்பின், னெழுந்தருளும்
பொருவருஞ்சீர் வன்றொண்டர் புகழ்ச்சேர ருடன்புனிதர்
மருவியதா னம்பலவும் பணிந்துபோய், மலைச்சாரல்
குருமணிகள் வெயிலெறிக்குங் குற்றாலஞ் சென்றடைந்தார்.
106
(இ-ள்) இருபெரு...பின் - முன் கூறியவாறு சோழ பாண்டியர்களாகிய இருபெரு மன்னர்களும் மீண்டு சென்ற பின்னர்; எழுந்தருளும்.....சேரருடன் - எழுந்தருளிச் செல்கின்ற வன்றொண்டர் புகழினையுடைய சேரலனாருடனே புனிதர்.....போய் - இறைவர் வெளிப்படப் பொருந்திய பதிகள் பலவற்றையும் பணிந்து சென்று; மலைச்சாரல்....அடைந்தார் - மலையின் சாரலிலே நிறமுடைய மணிகள் சூரியன்போல ஒளிவீசும் திருக்குற்றாலத்தினைச் சென்று சேர்ந்தார்.
(வி-ரை) வன்றொண்டர் - சேரருடன் - என்றது வன்றொண்டரது யாத்திரையில் சேரமான் பெருமானார் உடன் போந்தனர் என்ற சரித வரலாறு குறித்தது.
தானம் பலவும் - இவை பாண்டி நாட்டின் தெற்கில் உள்ளவை.
குருமணிகள் வெயில் எறிக்கும் - குரு - நிறம்; வெயில் எறித்தல் - வெயில் சூரியன் கதிர் - போல ஒளி வீசுதல். குற்றால மலைச்சாரலில் இத்தகைய மணிகள் உள்ள சிறப்புக் குறித்தது; நீர் வளத்தால் உயர்ந்து செறிந்த சோலைகள் சூழ்ந்து பகலிலும் நிழலடர்வதனால் மணிகளின் வெயிற்கதிர் ஒளி வீசி மக்களியங்கத் துணை செய்வன என்பதும் தொனிக்குறிப்பு; வெயில் எறிக்கும் என்ற குறிப்புமது; நீர்வளமும் பிறவும் குறித்தபடியாம். திருநாவுக்கரசர் புராணத்துள் திருக்கயிலை யாத்திரையில் மணிகள் வெயில் எறித்த வரலாறு காண்க. (1620).