பாடல் எண் :3854

குற்றாலத் தினிதமர்ந்த கூத்தர்குரை குரைகழல் வணங்கிச்
சொற்றாம மலர்புனைந்து குறும்பலாத் தொழுதிப்பால்
முற்றாவெண் மதிமுடியார் பதிபணிந்து மூவெயில்கள்
செற்றார்மன் னியசெல்வத் திருநெல்வே லியையணைந்தார்.
107
(இ-ள்) குற்றாலத்து...புனைந்து - திருக்குற்றாலத்திலே இனிதாக எழுந்தருளியுள்ள கூத்தரது சத்திக்கின்ற கழலையணிந்த திருவடிகளை வணங்கிச் சொன்மலர்மாலை புனைந்து துதித்து; குறும்பலா தொழுது - திருக்குறும்பலா என்னும் திருக்கோயிலின் இறைவரை வணங்கி; இப்பால்....பணிந்து - இப்பக்கத்தில் முதிராத வெள்ளிய பிறை சூடிய முடியினையுடைய பெருமானது பதிகளை வணங்கிச் சென்று; எயில்கள்...அணைந்தார் - முப்புரங்களையும் அழித்த பெருமான் நிலை பெற எழுந்தருளிய செல்வத் திருநெல்வேலியைச் சென்றணைந்தருளினர்.
(வி-ரை) குற்றாலத்துக் - கூத்தர்வணங்கி...குறும்பலாத் தொழுது - இங்குக் குறித்தவை யிரண்டு தனிக்கோயில்கள். கூத்தர் கோயில் வேறு; குறும்பலாநாதர் கோயில் வேறு; இது பற்றி முன் ஆளுடைய பிள்ளையார் புராணத்துள் உரைத்தவை பார்க்க. அருவியின் வடகரையில் உள்ளது குறும்பலா; கூத்தர்கோயில் அதன் வடக்கில் ? நாழி யளவில் நகரினுள் சித்திர சபைக்குப் போகும் வழியில் உள்ளது; இது பழமையானது; தேவார திருவாசகங்கள் பலவற்றாலும் கூத்தர் என்றே போற்றப்படுவது; குறும்பலா என்பது, அகத்தியர் வைணவர்களின் வன்கண்மையினைப் போக்க விட்டுணு மூர்த்தியின் உருவத்தையே சிவலிங்க உருவமாக்கிய பதி; இக்கோயில் இதில் இருக்கும் (இருந்த?) குறும்பலா மரத்தினால் இப்பெயரெய்தியது; இனிதமர்ந்த என்பது தலத்தின் இனிய வளங்கள் பலவற்றையும் குறித்தது.
இப்பால்....பணிந்து - பதி - பதிகள் என்ற பொருளில் வந்தது. இவை பாவநாசம் - திருப்புடைமருதூர் முதலாயின என்பது கருதப்படும். இங்கு, இவ்வாறன்றிக், குறும்பலா என்பது தலமரத்தினையும், இப்பால் - பதி - அதன்கீழ் உள்ள கோயிலையும் குறிப்பன என்று கொண்டு அதற்குத் தக வுரைத்தலும் பொருந்தும். இப்பொருளில் இப்பால் என்பது, முன்னர் அவ்வுருவ மில்லாது, பிற்காலத்தில் அகத்தியரால் ஆக்கப்பட்ட வரலாற்றைக் குறிப்பினுணர்த்தி நின்றது.
திருநெல்வேலியை அணைந்தார் - மதுரையினின்றும் போந்த நம்பிகளும் சேரரும் மலைச்சார்பில் தென்மேற்காகச் செல்லும் சாலையில் சீவில்லிபுத்தூர் - சிவகிரி, கடையநல்லூர் வழியாக நேரேதிருக்குற்றாலம் சென்றருளினர் என்பதும், பின்னர், அங்கு நின்றும் தென்கிழக்குச் சாலையில் திருப்புடைமருதூர் வழியே திருநெல்வேலியை அணைந்தனர் என்பதும் கருதப்படும். திருக்குற்றாலம் - திருக்குறும்பலா - திருநெல்வேலி - இவற்றுக்கு நம்பிகள் பதிகங்கள் கிடைத்தில!