நெல்வேலி நீற்றழகர் தமைப்பணிந்து பாடிநிகழ் பல்வேறு பதிபிறவும் பணிந்தன்பால் வந்தணைந்தார் வில்வேட ராய்வென்றி விசயனெதிர் பன்றிப்பின் செல்வேத முதல்வரமர் திருவிரா மேச்சரத்து. | 108 | (இ-ள்) நெல்வேலி...பாடி - திருநெல் வேலியில் எழுந்தருளியுள்ள நீற்றழகராகிய இறைவரைப் பணிந்து பாடி; நிகழ்...பணிந்து - அப்பக்கம் நிகழ்கின்ற பலவேறு திருப்பதிகள் பிறவற்றையும் பணிந்து சென்று; வில்வேடராய்...திருவிராமேச்சரத்து - வில்லை ஏந்திய வேடருருவுடன் வெற்றியினையுடைய அருச்சுனனுக்கு முன்பு பன்றியின் பின்னே சென்ற வேத முதல்வராகிய இறைவரது விரும்பி எழுந்தருளியுள்ள திருஇரா மேச்சரத்தில் அன்பால் வந்தணைந்தார். (வி-ரை) நீற்றழகர் - திருநெல்வேலி யிறைவரது பெயர்களுள் ஒன்று. பாடி - நம்பிகளது இப்பதிகம் கிடைத்திலது! பதிபிறவும் - இவை திருச்செந்தில், திரு வுத்தரகோச மங்கை முதலாயினவாய்க் கரைவழியாயுள்ள பதிகள் என்பது கருதப்படும்; பல்வேறு என்று குறிப்பும் காண்க. திருச்சுழியல், திருக்கானப்போர், முதலிய பதிகள் பின்னர்த் திருவிராமேச்சரத்தினின்றும் திரும்ப வரும்போது வழிபட்டாராதலின் இங்கு நம்பிகள் சென்றபாதை கிழக்கு வடக்கு நோக்கி நேரே திருவிராமேசம் செல்லும் கரைவழி மட்பாதை என்பது கருதவரும்.வில்வேடராய்...செல் வேதமுதல்வர் - பாசுபதம் பெறும் பொருட்டுத் தவஞ்செய்திருந்த அருச்சுனனைக் கொல்லத் துரியோதன னேவலா வந்து பன்றி வடிவுடன் மறைந்து காத்திருந்த முகன் என்னும் அசுரனைச், சிவபெருமான், வேடவுருவங் கொண்டு நந்திகணத்தவர்களாகிய பரிசனங்களும் வேதங்கள் உருவு பூண்ட நாய்களும் சூழ எழுந்தருளி வந்து எய்த சரிதம் மாபாரத்துக் கேட்கப்படும்; வேதமுதல்வர் - என்ற குறிப்புமது. இச்சரிதம் திருமுறைத் திருவாக்குக்களிற் பல இடங்களிலும் போற்றப்படுவது. பணிந்தன்பர் - என்பதும் பாடம். |
|
|