பாடல் எண் :3858

திருச்சுழிய லிடங்கொண்ட செம்பொன்மலைச் சிலையாரைக்
கருச்சுழியில் வீழாமைக் காப்பாரைக் கடல்விடத்தின்
இருட்சுழியு மிடற்றாரை யிறைஞ்சியெதி ரிதழிமலர்ப்
பருச்சுழியத் துட“னூனா யுயிÓரெனும்பா மலர்புனைந்தார்.
111
(இ-ள்) திருச்சுழியல்...சிலையாரை - திருச்சுழியலிலே இடங்கொண்டு வீற்றிருக்கும் செம்பொன் மலையையே வில்லாக ஏந்தியவரை; கரு...காப்பாரை - கருப்பமாகிய சுழியிலே வீழாமற் காப்பவரை; கடல்....மிடற்றாரை - கடலில் எழுந்தவிடத்தின் கருமை தங்கிய கண்டத்தினையுடையவரை; எதிர் இறைஞ்சி - திருமுன்பு விழுந்து வணங்கி; இதழி...புனைந்தார் - கொன்றை மலர்மாலையாலாகிய பருத்த சுழியத்துடன் கூட “ஊனாய் உயிர் புகலாய்Ó என்று தொடங்கும் சொன்மலர் மாலையினைச் சூட்டினார்.
(வி-ரை) மலைச்சிலையார் - மலையினையே வில்லாக உடையவர். சிலை - வில்.
கருச்சுழி - கருப்பம் என்னும் சுழி. சுழியாவது வீழ்ந்தாரை உள்ளே அழுத்தும் தன்மையில் நீர் சுழித்துச் சேரும் மடு; சுழியில் அகப்பட்டார் தப்பிப் பிழைத்த லரிது. இருட்சுழியும் - நஞ்சினைக் கொண்டு சுழிக்கும்; நஞ்சுதங்கும் என்றலுமாம்.
பருச்சுழியம் - பரிய சுழியமாலை முடிப்பு; சுழியத்துடன் - சுழியத்தினையும் உடன் வைத்துப் போற்றிப் பாடியது; மலர் புனைந்த முடிப்பு இளமைக்கோலம் குறிக்கும்; குழகன் - (7) செண்டாடுதல் புரிந்தான் (9) என்ற பதிகப் பகுதிகள் இளமைக் கோலங் குறித்தல் காண்க.
ஊனாய் உயிர் - எனும் - இது பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு.
பாமலர் - பாமாலை - பதிகம்.