பாடல் எண் :3860

“கானப்பேர் யாமிருப்பÓ தெனக்கழறிக் கங்கையெனும்
வானப்பே ராறுலவு மாமுடியார் தாமகல,
ஞானப்பே ராளருணர்ந் ததிசயித்து“நாகமுடன்
ஏனப்பே ரெயிறணிந்தா ரருளிருந்த பரிÓசென்பார்,
113
(இ-ள்) கானப்பேர்.....தாம்அகல - யாம் இருப்பது “கானப்பேர்Ó என்று சொல்லி ஆகாயத்தின் கங்கை என்கின்ற பெரிய ஆறு உலவுதற்கிடமாகிய பெருமுடியினையுடைய பெருமான் மறைந்தருள; ஞானப்பேராளர்...அதிசயித்து - ஞானத்தின் பேராட்சியினையுடைய நம்பிகள் துயில்விழித்துணர்ந்து அதிசயம் கொண்டு; நாகமுடன்..என்பார் - பாம்பினோடு பன்றியின் கொம்பினையும் அணிந்த இறைவரது திருவருள் என்பால் இருந்த தன்மைதான் என்னே? என்பாராய்,
(வி-ரை) கானப்பேர் - கானப்பேரூரர்; காளையார் கோயில். அகல - கனவிற் காட்டிய வேடத்தை மறைத்தருள.
ஞானப்பேராளர- பேர் - பெரிய; ஞானத்தினைப் பேரரசாட்சி புரிபவர்; நம்பிகள்; ஞானம் - சிவனறிவு; இங்குச் சிவயோக முதல்வர் என்ற பொருளில் வந்தது.
உணர்ந்து - உணர்தல் - கனவு நிலை நீங்கித் துயில் உணர்தலையும், கனவிற் கண்டவற்றைப் பின்னர் நனவு நிலையில் உணர்தலையும் குறித்து நின்றது. காட்டிக் - கழறி - அகல - உணர்ந்து என்று கூட்டுக; எங்குமிலாத் திருவேடமாதலின் இறைவர் அருட் கண்ணாற் கண்டு காட்டிக் கழறினாலன்றி காண வொண்ணாதாம் என்பது; உணர்ந்து என்ற குறிப்புமிது.
அருளின் பெருமை இருந்த பரிசுதான் என்னே - என்பது அதிசயக்குறிப்பு. பரிசு - தன்மை. பரிசு - பரிசுதான் என்னே?