மன்னுதிருக் கானப்பேர் வளம்பதியில் வந்தெய்திச் சென்னிவளர் மதியணிந்தார் செழுங்கோயில் வலங்கொண்டு முன்னிறைஞ்சி யுள்ளணைந்து முதல்வர்சே வடிதாழ்ந்து பன்னுசெழுந் தமிழ்மாலை பாடினார் பரவினார். | 116 | (இ-ள்) மன்னு...எய்தி - நிலைபெற்ற திருக்கானப்பேர் என்னும் வளம்பதியில் வந்து சேர்ந்து; சென்னிவளர்...உள்ளணைந்து - தலையிலே வளர்கின்ற பிறையினை அணிந்த இறைவரது செழுங்கோயிலினை வலமாகச் சுற்றி வந்து அதன் முன்பு வணங்கி உள்ளே அணைந்து; முதல்வர்...பரவினார் - முதல்வனாரது சேவடிகளில் வீழ்ந்து வணங்கிப் பன்னுகின்ற செழுந்தமிழ் மாலையினைப் பாடித்துதித்தனர். (வி-ரை) பதியில் வந்து எய்தி - என்றதனால் இப் பதிகம் பதியின் புறத்தே வருதற்முன் வழியிற் பாடியருளியதென்பது கருதப்பட்டது. முன் - திருக்கோபுரத்தின் முன்பு; உள் - கோயிலினுள். பன்னு செழுந்தமிழ்மாலை பாடினார் - பன்னுதல் - பலவாறும் எடுத்துச் சொல்லுதல்; தமிழ்மாலை - திருப்பதிகம்; பாடினார் - பாடினாராகி; பாடி; முற்றெச்சம். வினைமுற்றாகக் கொண்டு பரவினார் என்பதற்குப் பதிகத்தாலன்றி வேறு பலவாற்றாலும் துதித்தனர் என்றுரைத்தலுமாம். தமிழ்மாலை - நம்பிகள் இறைவரது திருமுன்பு பாடிய இத்திருப்பதிகம் கிடைத்திலது! |
|
|