பாடல் எண் :3864

ஆராத காதலுட னப்பதியிற் பணிந்தேத்திச்
சீராருந் திருத்தொண்டர் சிலநாளங் கமர்ந்தருளிக்
காராரு மலர்ச்சோலைக் கானப்பேர் கடந்தணைந்தார் போரானேற் றார்கயிலைப் பொருப்பர்திருப் புனவாயில்.
117
(இ-ள்) ஆராத...அமர்ந்தருளி - நிறைவு பெறாத பெருவிருப்பினுடனே அத்திருப்பதியிலே பணிந்து துதித்துச் சிறப்புடைத் திருத்தொண்டர்களாகிய நம்பிகளும் சேரனாரும் அங்குச் சில நாட்கள் விரும்பித் தங்கியிருந்தருளி; காராரும்...கடந்து - மேகங்கள் தங்குதற்கிடமாகிய மலர்ச்சோலைகள் சூழ்ந்த திருக்கானப்பேர்ப் பதியினைக் கடந்து சென்று; போர் ஆன் ஏற்றார்...திருப்புனவாயில் - போர்வல்ல இடபத்தினையுடையவரும் கயிலைமலையினைவுடையவருமாகிய இறைவரது திருப்புனவாயிலினை; அணைந்தார் - சென்று சேர்ந்தார்கள்.
ஆராதகாதல் - பதிகத்துக் கண்ட “உன்னி மனத்தயரா உள்ளுருகிÓ (10) “கண்குளிரÓ (1) முதலிய பகுதிகள் பார்க்க.
திருத்தொண்டர் - நம்பிகளும் சேரமானாரும் ஆகிய இருவரும்.
போர் - ஆனேறு - போர்வல்ல இடபம்; ஏறு - விலங்கினத்தின் ஆண்பாற் பெயர். “ஏறுமேற்றையும்Ó (தொல் - பொருள். மரபியல் 2); ஆனேறு - போர் என்ற குறிப்பினால் ஈண்டு ஊர்தியினையும் கொடியினையும் குறித்தது. “ஊர்தி வல்வெள் ளேறே சிறந்த, சீர்கெழு கொடியு மவ்வே றென்பÓ (புறம்)
ஆனேற்றார் - பொருப்பர்s - ஏற்றாரும் பொருப்பரும்; ஏற்றாராகிய பொருப்பர் என்றலுமாம். பொருப்பு - மலை.