பாடல் எண் :3866

திருப்புனவா யிற்பதியி லமர்ந்தசிவ னார்மகிழும்
விருப்புடைய கோயில்பல பணிந்தருளால் மேவினார்
பொருப்பினொடு கானகன்று புனற்பொன்னி நாடணைந்து
பருப்பதவார் சிலையார் தம் பாம்பணிமா நகர் தன்னில்.
119
(இ-ள்) திருப்புனவாயில்.....பணிந்து - திருப்புனவாயில் பதியிலே விரும்பி யெழுந்தருளிய சிவபெருமான் மகிழ்ந்தருளும் விருப்பமுடைய கோயில்கள் பலவற்றையும் வணங்கி; அருளால் - அருள்விடை பெற்று; பொருப்பினொடு கான்அகன்று - குன்றுகளும் கானங்களும் கடந்து நீங்கி; புனல்.....அணைந்து - நீர்வளம் மிக்க காவிரி நாட்டினைச் சேர்ந்து; பருப்பதம்.....தன்னில் - மலையாகிய நீண்ட வில்லினையுடைய இறைவரது திருப்பாம்பணி என்று வழங்கும் நகரத்தில்; மேவினார் - சென்று சேர்ந்தனர் (சேரருடன் நம்பிகள்.)
(வி-ரை) பதியில் கோயில்பல - இப்புனவாயிற் பதியில் பாண்டி நாட்டு ஏனைப் பதின்மூன்று பதிகளின் கோயில்களும் தாபிக்கப்பட்டுள்ளன; பதியில் உள்ள பலகோயில் என்க; பல என்றமையால் மேற்செல் வழியிடை உள்ள ஓரியூர் (வைப்பு) - திருமணமேற்குடி, திருப்பெருந்துறை (வைப்பு) முதலியனவும் கொள்ளலாம்.
பொருப்பினொடு கானகன்று - பொருப்பு - சிறுகுன்றுகள்; கான் - குறுங்காடு; திருப்புனவாயிலினின்றும் சோழநாட்டெல்லை வரையும் திருப்பாம்பணி நகர் வரையும் உள்ள பாண்டி நாட்டின் பகுதியின் இயல்பு கூறியபடி, இன்றும் இவ்வாறே காணலாம்.
பருப்பதம் - மேருமலை; சிலை - வில்; வார் - நீண்ட.
பாம்பணி - நகரின் பெயர்; பாதாளீச்சரம் - கோயிலின் பெயர்.
கோயில் பணிந்தருள்பெற்று - என்பதும் பாடம்.