பாடல் எண் :3867

பாதாளீச் சரமிறைஞ்சி யதன்மருங்கு பலபதியும்
வேதாதி நாதர்கழல் வணங்கிமிகு விரைவினுடன்
சூதாருந் துணைமுலையார் மணிவாய்க்குத் தோற்றிரவு
சேதாம்பல் வாய்திறக்குந் திருவாரூர் வந்தணைந்தார்.
120
(இ-ள்) பாதாளீச்சரம்.....வணங்கி - திருப்பாதாளீச்சரத்தில் இறைவரை வணங்கிப் போய் அதன் பக்கத்தில் உள்ள பல பதிகளிலும் வேதங்களுக்கெல்லாம் ஆதியராகிய இறைவரது திருவடியை வணங்கிச் சென்று; சூதாரும்...திருவாரூர் - மாங்கனிபோன்ற இரண்டு தனங்களையுடைய பெண்களின் அழகிய வாயினுக்குத் தோற்றமையினாலே பகலில் வாய்திறக்க ஆற்றாமல், இராத்திரிப் போதில் செவ்வாம்பல் மலர்கள் வாய் திறத்தற்கிடமாகிய திருவாரூரில்; மிகு விரைவினுடன் - மிக்க விரைவாக; வந்தணைந்தார் - வந்து சேர்ந்தார்கள்.
(வி-ரை) பாதாளீச்சுரம் - பிலமுகத்தினின்றும் ஆதிசேடன் வந்து பூசித்தனன் என்பது தலவரலாறு; பாதாள் - பாதாள உலகத்தினின்றும் வரும் பிலம்; “உறைகோயில் பாதாளேÓ (தேவா).
பலபதியும் - இவை பாதாளீச்சரத்துக்கும் திருவாரூருக்கும் அணிமையில் உள்ளவை, இவை திருப்பூவனூர், திருவிடைவாய், திருப்பேரெயில், திருநாட்டியத்தான்குடி, திருவிளமர் முதலாயின என்பது கருதப்படும்.
மிகுவிரைவினுடன் - திருவாரூரிறைவரைப் பிரிந்து நீண்டு சென்ற யாத்திரையினால் நெடுநாள்களாயினமையின் அவ்வார்வம் பற்றி மிக்க விரைவுடன் போந்தனர் என்க. “எத்தனைநாட் பிரிந்திருக்கே னென்னாரூ ரிறைவனையேÓ (தேவா) என்பது முதலிய திருவாக்குக்கள் காண்க.
சூதாரும் - சூது - மாங்கனி; சூதாடுகருவி என்றலுமாம்; சேதாம்பல் - செவ்வல்லி (ஆம்பல் ) பகலில் மலராது இரவில் மலர்தற்குக் காரணங் கற்பித்தவாறு; தற்குறிப்பேற்ற வணி; பெண்களின் வாய் செவ்வாம்பல் போன்றது என்பர்; ஈண்டு, அவ்வாறன்றி, ஆம்பல்கள், வாயின் அழகுக்குத்தோற்றமையின் பகலில் வாய்திறக்க அஞ்சி இரவில் வாய்திறந்தன என்பது; பொருளுக்கேற்ப ஈண்டு வாய்திறத்தல் - பேசுதல் - அலர்தல் என்ற இருபொருள்பட வந்த சிலேடை; பெண்களின் பொலிவினால் நகர்வளங் கூறியபடி. தடுத் - புரா - (1) பார்க்க.