பாடல் எண் :3869

வாசமலர்க் கொன்றையார் மகிழ்கோயில் வலங்கொண்டு
நேசமுற முன்னிறைஞ்சி நெடும்பொழுதெ லாம்பரவி
ஏசறவாற் றிருப்பதிக மெடுத்தேத்தி யெழுந்தருளாற்
பாசவினைத் தொடக்கறுப்பார் பயில்கோயில் பணிந்தணைவார்,
122
(இ-ள்) வாசமலர்...எழுந்து - மணமுடைய மலர்க்கொன்றை சூடிய இறைவர் மகிழும் திருக்கோயிலினை வலமாகச் சுற்றி வந்து அன்பு பொருந்தத் திருமுன்பு வணங்கிப் பெரிய வழிபாட்டுக் காலங்களில் எல்லாம் துதித்து ஏசறவினாலே திருப்பதிகத்தினை எடுத்துப் பாடித் துதித்து நீங்கி; அருளால்....அணைவார் - அருள் விடை பெற்றுப் புறம்போந்து பாசவினைப் பற்றுக்களை அறுப்பாராகிய இறைவர் விளங்க வீற்றிருக்கும் திருக்கோயிலினைப் பணிந்து புறம்பே செல்வாராகி.
(வி-ரை) கோயில் - “கோயிலினுள் - புகுந்தார்Ó என முன் (3863) கூறியதனால், இங்குக் கோயில் என்றது பூங்கோயிலினுள் இறைவர் எழுந்தருளிய திருமாளிகையினைக் குறித்து நின்றது. மகிழ் கோயில் என்ற குறிப்புமது.
நெடும் பொழுது எல்லாம் பரவி - நெடும் பொழுது - வழிபாட்டுக் காலங்கள்; “காலமெல்லாந் துதித்திறைஞ்சிÓ (2062).
ஏசறவால் - நீண்டகாலம் பிரிந்திருந்த ஆற்றாமையினாலே போந்த வருத்தம். ஏசறவு - ஈண்டு அன்பு என்னும் பொருட்டு.
திருப்பதிகம் எடுத்து ஏத்தி - திருப்பதிகத்தினைத் தொடங்கிப் பாடி; எடுத்தல் - பெரிதும் போற்றுதல் என்றலுமாம்.
எழுந்து - வழிபட்ட நிலையினின்றும் நீங்கி.
அருளால் - அருள்விடை பெற்றுப் புறம்போந்து.
கோயில் பணிந்து - இது கோயிலின் புறம்பு வந்து செய்த வணக்கம்.
அணைவார் - மேற்றிருமாளிகையில் செல்வாராகி; மேல், புறம் போந்து - (புறம்பு வந்து) திருமாளிகையில் என்பன இடநோக்கி வருவிக்கப்பட்டன.
அணைவார் - புகுந்தார் - என வரும்பாட்டுடன் முடிக்க; அணைவார் - முற்றெச்சம்; அணைவாராய்.