பரவையார் மாளிகையிற் பரிசனங்கண் முன்னெய்த விரவுபே ரலங்கார விழுச்செல்வ மிகப்பெருக வரவெதிர்கொண்டடிவணங்க வன்றொண்டர் மலைநாட்டுப் புரவலனா ரையுங்கொண்டு பொன்மணிமா ளிகைபுகுந்தார். | 123 | (இ-ள்) பரவையார்...எய்த - பரவையாரது திருமாளிகையின்கண் பரிசனங்கள் முன்னர்ச் சென்று சேர்ந்தார்களாக; விரவு...பெருக - பொருந்தும் பெரிய அலங்கார வகைகளாகிய தூய மங்கலங்கள் மிகவும் நிறைவாகச் செய்து; வரவு..வணங்க - பரவையார் எதிரேவந்து நல்வரவேற்று அடிவணங்க; வன்றொண்டர்....புகுந்தார் - நம்பிகன் மலைநாட்டரசராகிய சேரனாரையும் உடன் கொண்டு பொன்னணிந்த அழகிய திருமாளிகையினுள்ளே புகுந்தருளினர். (வி-ரை) பரிசனங்கள் முன்எய்த - திருவாரூர்ப் பதியில் வந்தவுடன் நம்பிகள் சேரனாருடன் நேரே திருக்கோயிலிற் சேர்ந்தாராதலின் பரிசனங்கள் முன்னே திருமாளிகையிற் சென்று சேர்ந்து அறிவித்து இருந்தனர் என்பதாம். எய்த - எய்தி அறிவித்தமையால். விரவு....பெருக - விரவுதலாவது எதிர்கொள்வதற் கேற்றவாறு பொருந்துதல்; பெருக்கி என்பது பெருக எனத் திரிந்து நின்றது. போலங்கார விழுச்செல்வம் - திருவாயில் கோடித்தல், தோரணம், பூமாலை, நிறைகுடம், விளக்கு நிரைத்தல் முதலாயின; செல்வம் - மங்கலப் பொருள்களை ஏந்துதல்; விழுமை - அடியாராந் தன்மையின் பொருட்டுச் செய்யப்படுதல் குறித்தது. பேரலங்காரம் - அரசராந்தன்மை குறித்துச் செய்யப்படுதல் குறித்தது. அடிவணங்க - பரவையார் என்ற எழுவாய் வருவிக்க. வன்றொண்டர- புகுந்தார் - என்க; மாளிகையின்கண்; ஏழனுருபு தொக்கது. முன் “கோயிலினுள் புகுந்தார்Ó (3868) என்றார்; அங்குப் புகுந்தது விரும்பும் பெரும்பேறு பெற என்றமையால், இங்குப் புகுந்தார் என்றது உபசரித்து அமர என்று கொள்க. |
|
|