பரவியே பரவையார் பரிவுடனே பணிந்தேத்தி விரவியபோ னகங்கறிகள் விதம்பலவா கச்சமைத்துப் பரிகலமும் பாவாடை பகல்விளக்கு முடனமைத்துத் திருவமுது செய்வித்தார் திருந்தியதேன் மொழியினார். | 124 | (இ-ள்) பரவியே.....ஏத்தி - பரவையார் (உட்போந்தவுடன் முகமன்கூறி) பரவி அன்புடனே பணிந்து துதித்து; விரவிய...சமைத்து - பொருந்தி்ய திருவமுதும் கறிகளும் பற்பல விதங்களாகச் சமைப்பித்து; திருந்திய தேன்மொழியினார் - திருத்தம் பெற்ற தேன்போன்ற மொழியினையுடையராகி; பரிகலமும்...திரு அமுது செய்வித்தார் - பரிகலமும் அதன் கீழிடும் திருப்பாவாடையும் பகல் விளக்கும் உடனே ஒழுங்குபட அமைத்து (இருவருக்கும் பரிசனங்களுக்கும்) திருவமுது செய்வித்தனர். (வி-ரை) பரவியே...பணிந்தேத்தி - இது திருமாளிகையினுள்ளே போந்த பின்னர் ஆசனத்தமர்வித்துச் செய்யும் வழிபாட்டுமுறை; முன் “அடிவணங்கÓ (3870) என்றது திருமாளிகை வாய்தலினின்று எதிர்கொண்டு வரவேற்ற வணக்கம். இவ்வடி முற்றுமோனை பெற அருளியது உபசார வகைகளெல்லாம் முற்ற வியற்றிய நிலைக்குறிப்பு. விரவிய - விருந்தின் தகுதிக் கேற்பப் பொருந்திய; விரவிய கறிகள் என்றும் கூட்டியுரைக்க நின்றது; விரவிய போனகம் - என்றது நெய் - சர்க்கரை - பாசிப் பருப்பு - மிளகு முதலியவை கலந்த சித்திரான்ன வகை என்பர் முன் உரைகாரர். போனகம் - திருவமுது; அன்னம்; கறிகள் விதம் பலவாக - கறிகள் பல; (அவற்றின்) விதங்களும் பல என்க. சமைத்து - சமைப்பித்து. பரிகலம் - பாவாடை - பாவாடை - கால்பரிகலம் - இவை பெரியோரை அமுது செய்விக்கும் முறை. முன் உரைத்தவை (3732) பார்க்க; பகல்விளக்கு - ஒளியின் பொருட்டன்றி உபசாரத்தின் பொருட்டு வைப்பது; பகல் என்றமையால் ஒளியின் பொருட்டன்று என்பது பெறப்படும். திருந்திய தேன்மொழியினார் - திருந்திய - திருத்தம் பெற்ற; அடியார்களை உபசரித்து அமுதூட்டி ஊட்டித் திருத்தம் பெற்ற; மொழியினார் - மொழியினாராகி; குறிப்புவினையெச்சம். தேன்மொழியினார் என்றது இன்மொழி கூறி இன்னமு தூட்டல் வேண்டும் மரபு குறித்தது “ஈரமென் மதுரப்பதம் பரிவெய்த முன்னுரை செய்தபின்Ó (442). திருஅமுது செய்வித்தார் - இளையான்குடி மாறனார் புராணம் (442- 443) - சிறுத்தொண்ட நாயனார் புராணம் (3731 - 3732) - இவ்விடங்களிலும், முன் இப்புராணத்தும் ஈண்டும் உரைத்தவற்றையெல்லாம் ஒன்று சேர்ப்பின் அடியாரை ஊட்டும் திறம் எல்லாம் பெறப்படும். பின்னர்க் கழறிற்றறிவார் நம்பிகளை அமுதூட்டும் திறமும் இங்குக் கூடக்கருதுக; கூறியது கூறாது அங்கங்கும் கூறியவற்றைத் திரட்டிக் காண எல்லாம் வரும்படி அமைக்கும் ஆசிரியரது தெய்வக் கவிநலம் கண்டு களிக்க. |
|
|