விரவுகாதன் மீக்கூர மேவு நாள்கள் பலசெல்லக் கரவி லீகைக் கேரளனார் தங்கள் கடல்சூழ் மலைநாட்டுப் பரவை யார்தங் கொழுநனார் தம்மைப் பணிந்து கொண்டணைவான் இரவும் பகலுந் தொழுதிரக்க விசைந்தா ரவரு மெழுந்தருள. | 127 | (இ-ள்) விரவு....செல்ல - பொருந்திய பெருவிருப்பம் மேலும் அதிகரிக்க இவ்வாறு தங்கும் நாள்கள் பலவும் கழிய; கரவில்....இரக்க - கரத்தல் இல்லாத கொடையினையுடைய சேரலனார் கடல் சூழ்ந்த தங்கள் மலைநாட்டின்கண் பரவையாரது கணவனாராகிய நம்பிகளைப் பணிந்து உடன் அழைத்துக்கொண்டு செல்லுதற் பொருட்டு இரவும் பகலும் வணங்கி வேண்ட; இசைந்தார் அவரும் எழுந்தருள - அவரும் எழுந்தருளுதற்கு இசைந்தருளினர். (வி-ரை) கரவில் ஈகை - “தண்டாத கொடைÓ (3751); “கார் கொண்ட கொடைÓ (தொகை); கரவு - ஒளித்தல்; மறுத்தல.் கரவின்மையாவது யாவர் யாது வேண்டினும் மறுத்தலும் மறைத்தலு மில்லாமை. இஃது இறைவரருளாற் பெற்ற பேறு. கேரளம் - சேரநாட்டின் பெயர்; வடமொழி வழக்கு. கொண்டு - அணைவான் உடன்கொண்டு செல்லும் பொருட்டு. இரவும் பகலும் தொழுதிரக்க - “இறைகளோ டிசைந்த வின்ப மின்பத்தோ டிசைந்த வாழ்வு, பறைகிழித் தனைய போர்வைÓ (நம்பி -ஆரூரர்) என்ற நம்பிகள் உலக அரச போக இன்பங்களைப் பொருளென மதியாத நிலையினராதலின், அரசருடன் செல்ல எளிதின் இசையார்; ஆதலின் பணிந்து - தொழுது - இரக்க என்றார்; இரவும் பகலும் என்றது இடைவிடாது என்ற கருத்துடையது; “பன்னா ளழைத்தாலிவனெனைப், பன்னா ளழைப்பொழி யானென் றெதிர்ப்படுமேÓ (தேவா - அரசு) என்ற இறைவரது தன்மையே அவர் தோழராகிய நம்பிகளது தன்மையுமாம். மலைநாடும், மேல் இருமுறை நம்பிகளது திருவடி தோய்தலாற் புனிதம் பெற்று வாழ்வடைய நின்ற கொங்குநாடும் செய்த தவவிசேடம் உருப்பட்டுச் சேரலனாரை இவ்வாறு இரக்கச் செய்தது; அத்தவப்பயன் வாய்ப்பப் பக்குவப்படுதற்கு பன்முறை பணிதலும் தொழுதலும் இரத்தலும் வேண்டப்பட்டன என்க. நம்பிகளது இசைவு - எங்கள் தவப்பயன் கூடும் காலம் என்பதாம்; இது மேல்வரும் இரண்டு பாட்டுக்களாலும் விளங்கும். |
|
|