பாடல் எண் :3875

நங்கை பரவை யாருள்ளத் திசைவா னம்பி யெழுந்தருளத்
திங்கண்ள் முடியார் திருவருளைப் பரவிச் சேரமான்பெருமாள்
எங்கு முள்ள வடியாருக் கேற்ற பூசை செய்தருளிப்
பொங்கு முயற்சி யிருவரும் போய்ப் புக்கார் புனிதர் பூங்கோயில்.
128
(இ-ள்) நங்கை...எழுந்தருள - நங்கை பரவையாரது உள்ளமார்ந்த இசை வினையும் பெற்று நம்பிகள் எழுந்தருளினாராக; திங்கள்.....பரவி - மதியினை முடித்த இறைவரது திருவருள் இவ்வாறு பெறப் பெற்றதன் பொருட்டுத் துதித்து; சேரமான் பெருமான்...செய்தருளி - சேரமான் பெருமான் நாயனார் அத்தலத்தில் எங்கெங்கும் உள்ள சிவனடியார்களுக்குத் தக்கவாறு பூசைகள் செய்தருளுவித்து; பொங்கும்......பூங்கோயில் - மேல் எழுகின்ற முயற்சியினாலே இருபெரு மக்களும் இறைவரது பூங்கோயிலினுட் புகுந்தருளினர்.
(வி-ரை) நங்கை.....இசைவால் - பிரிவாற்றாத தன்மையுள்ள தலைவியாராதலின் ஆற்றியிருத்தற் பொருட்டு அவரது இசைவு வேண்டப்படுவதாயிற்று; ஈண்டு இறைவரது தலயாத்திரைபற்றி யன்றித் தோழர் ஒருவர் பொருட்டுப் பிரியும் நிலையாதலானும் இது வேண்டப்படுவதாம்; முன் எல்லாம் இவ்விசைவு கூறாமையும் கருதுக.
திருவருளைப் பரவி - எழுந்தருளுவதற்கு நம்பிகளையும் பரவையாரையும் இசைவு படச் செய்த திருவருளைத் துதித்து; திருவருளாலன்றி இப்பெரும் பேறு பெறுதற்கரிது என்பதாம்.
எங்கும் உள்ள.....செய்தருளி - எங்கும் - அத்திரு நகரெங்கெங்கும்; அடியார் - பூசையாவது மாகேசுவர பூசை, அமுதுபடி யளித்தல் முதலாயின; நம்பிகள் தம்முடன் தமது மலைநாட்டுக்கு எழுந்தருளப் பெறுவதைப் பெறற்கரும் பெரும் பேறெனக் கருதி இவ்வாறு கொண்டாடினார் என்பதாம்; பெரியவர் வருகை யிவ்வாறு கொண்டாடத்தகுவது என்பதுமாம்.
புனிதர் பூங்கோயில் புக்கார் - வணங்கி அருள்விடை பெறும் பொருட்டுப் புகுந்தனர்.