பொன்பரப்பி மணிவரன்றிப் புனல்பரக்குங் காவேரித் தென்கரைபோய்ச் சிவன்மகிழ்ந்த கோயில்பல சென்றிறைஞ்சி மின்பரப்புஞ் சடையண்ணல் விரும்புதிருக் கண்டியூர் அன்புருக்குஞ் சிந்தையுடன் பணிந்துபுறத் தணைந்தார்கள். | 130 | (இ-ள்) பொன்பரப்பி...போய் - பொன்னைப் பரப்பியும் மணிகளை வாரிக் கொழித்தும் நீர் பரந்து செல்லும் காவேரித் திருநதியின் தென்கரைவழியிலே சென்று; சிவன்......இறைஞ்சி - சிவபெருமான் மகிழ்தெழுந் தருளியுள்ள திருக்கோயில்கள் பலவற்றிலும் சென்று வணங்கி; மின்பரப்பும்....அணைந்தார்கள் - மின்போலும் ஒளி வீசுகின்ற சடையினையுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் திருக்கண்டியூரினை அன்பினால் உருக்கப்படும் மனத்தினுடனே சென்று பணிந்து புறம்பே போந்தருளினர். (வி-ரை) பொன்பரப்பி....காவேரி - காவேரி - காவிரி; நீர்வளம் குறித்த சொன்னயங் கொண்ட கவிநலம் காண்க; பொன் - காவிரி மணலுடன் கலந்துவரும் பொற்றுகள் ; வரன்றுதல் - வாரிக் கொழித்தல்; பரக்கும் - பரவிச் செல்லும். காவேரித் தென்கரை - காவிரி நதியின் தென்பால். கோயில் பல - முன்பாட்டின் கீழ் உரைக்கப்பட்டன. அன்புருக்கும் சிந்தையுடன் - உருக்கும் - உருக்கப்பட்ட; செயப்பாட்டு வினைப்பொருளில் வந்தது. அன்பு - அன்பினால் திருக்கண்டியூர் - நம்பிகள் பதிகம் கிடைத்திலது! |
|
|