பாடல் எண் :3879

ஐயா றதனைக் கண்டுதொழு தருளா ரூரர் தமைநோக்கிச்
செய்யாள் பிரியாச் சேரமான் பெருமா ளருளிச் செய்கின்றார்
“மையார் கண்டர் மருவுதிரு வையா றிறைஞ்ச மனமுருகி
நையா நின்ற திவ்வாறு கடந்து பணிவோ நாÓ மென்ன,
132
(இ-ள்) செய்யாள் பிரியாச் சேரமான் பெருமாள் - இலக்குமி பிரியாத சேரமான் பெருமாணாயனார்; ஐயாறதனைத் தொழுது - திருவையாற்றினைத் தொழுது அருள் ஆரூரர் தமை நோக்கி - அருளினையுடைய நம்பியாரூரரைப் பார்த்து; அருளிச் செய்கின்றார் - அருளிச் செய்கின்றாராய்; மையார்.....நாம் என்ன - விடம் நிறைந்த கண்டத்தினையுடைய இறைவர் எழுந்தருளியுள்ள திருவையாற்றினைச் சென்று பணிய மனம் உருகி நைவதாயிற்று; நாம் இந்த ஆற்றினைக் கடந்து சென்றுபணிவோம் என்று கூற,
(வி-ரை) சேரமான் பெருமாள் - தொழுது - அருளிச் செய்கின்றார் - என்ன என்று கூட்டுக. சேரமானார் அழைத்துச் செல்ல அவருடன் மலைநாடு நோக்கி நம்பிகள் செல்கின்றாராதலின், அச்செலவிலே வழி நின்றும் வேறு விலகிச் செல்லும் நிலை அவர்கூற நிகழ்ந்தது என்ற குறிப்பும் காண்க.
செய்யாள் பிரியா - நில வேந்தன் திருமாலின் அமிசமுடையவன் எனப்படுதல் மரபாதலின் இலக்குமி பிரியாத என்றார்; “திருவுடை மன்னரைக் காணிற்றிருமாலைக் கண்டேனே யென்னும்Ó (திருவாய்மொழி) என்பதும் காண்க. செய்யாள் - திருமகள்; நிலமகள் என்றலுமாம்.
அருளிச் செய்கின்றார் - அருளிச் செய்கின்றாராகி; முற்றெச்சம்; அருளிச் செய்கின்றார் - என்ன என்று கூட்டுக.
மனம் உருகி நையா நின்றது - மனம் உருகுதலால் நைதலை அடைந்தது; உருகுதலின் முதிர்ந்த நிலை நைதல் எனப்படும்; நைதல் - மிகவும் உடைதல் - இளகுதல்.
இவ் ஆறு கடந்து பணிவோம் நாம் - இங்கு நின்றவாறே மனத்தாற் பணிதலன்றி அங்குச் சேர்ந்து உடலாலும் பணிவோம் என்பார் ஆறு கடந்து என்றார்.