மன்றி னிறைந்து நடமாட வல்லார் தொல்லை யையாற்றில் கன்று தடையுண் டெதிரழைக்கக் கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல் ஒன்று முணர்வாற் சராசரங்க ளெல்லாங் கேட்க “ஓலÓ மென நின்று மொழிந்தார்; பொன்னிமா நதியு நீங்கி நெறிகாட்ட, | 135 | (இ-ள்) மன்றில்...வல்லார் - திருவம்பலத்தினுள் நிறைந்து திருக்கூத்தினை ஆடவல்லவராகிய இறைவர்; தொல்லை - போல் - தனது கன்று தடைப்பட்டு எதிர் கூப்பிடக் கேட்டுத் தான் கதறிக் கனைக்கும் புனிற்றுப் பசுப்போல; ஒன்றும்.....மொழிந்தார் - ஒன்றிய உணர்வினாலே சராசரங்கள் எல்லாம் கேட்கும் படி ஓலம் என்று நின்று மொழிந்தருளினர்; பொன்னி....காட்ட - அப்போது பெரிய காவிரி நதியும் தொடர்ச்சி நீங்கி வழிகாட்ட, (வி-ரை) மன்றில் நிறைந்து நடமாட வல்லார் - முன் “நிருத்தர்Ó (3880) என்றவிடத் துரைத்தவை பார்க்க; முன் கூறியது நாயன்மார் எண்ணிய நிலை; இங்குக் கூறியது அவ்வாறே இறைவர் அவர்க்கு அருளிய நிலை; வல்லார் - வல்லமையாவது பிறிதெவர்க்கு மியலாமை. கன்று..போல் - கன்று, தன் தாய்ப் பசுவினை அணுகுதற்கு இடையில் ஏதேனும் தடையுண்டாகில் தாயினை அழைத்துக் கூவும்; அதுகேட்டுத் தாய்ப்பசுவும் தானும் அம்மாவெனக் கதறி எதிர்கூவும்; இவ்வாறு உலகிற் காணும் இயல்புபற்றி இவ்வுவமை எழுந்தது; வினைபற்றி எழுந்த உவமம்; கன்று - நம்பிகள்; தடை - காவிரி ஆறு இடையில் பெருகுதல்; தாய்ப்பசு - இறைவர்; புனிற்றா - ஈன்றணிய பசு. ஒன்றும் உணர்வால்.....கேட்க - ஓலம் - என - ஒன்றும் உணர்வால் - இறையுணர்வுடன் ஒன்றித்த உணர்வினாலே; ஒன்று முணர்வுடையார்க்கே இது கேட்கத் தக்கது என்பார் ஒன்று முணர்வாற் கேட்க என்றார். சேரமானார் நாளும் சிலம்பொலி கேட்டதுபோல; சரம் - அசரம் - என்பது சராசரம் என வந்தது; சரம் - இயங்கும் பொருள்; அசரம் - இயங்காத நிலையியற் பொருள்; இவை இரண்டும் உயிருள் பொருள். ஓலம் - அஞ்சல் - அபயம் என்னும் பொருளில் வரும் சொல்; இது அபயமளிப்பார் - பெறுவார் இருவர்பாலும் நிகழும். ஐயாற்றில் நின்று மொழிந்தார் என்று கூட்டுக. நதியும் நெறிகாட்ட - உம்மை மொழிந்த ஒலி கேட்டபோதே நதியும் நெறிகாட்டிற்று என உடனிகழ்ச்சி குறித்தது; மொழிந்தார் - அப்போது உடனே காட்ட என்க. நீங்கி - தொடர்ந்து பெருகி ஓடும் நிலை நீங்கி; நெறி - நடந்து செல்லும் வழி என்ற பொருளில் வந்தது; நெறி -அன்பு நெறியின் உயர்வினை என்ற குறிப்பும்பட நின்றது; (3880) இப்பொருளில் உம்மை இழிவு சிறப்பு. நெறிகாட்ட மொழிந்தார் - என்ற கூட்டியுரைத்தனர் முன்னுரைகாரர். நெறி காட்ட - நிற்க வழிபண்ணிப் - பரப்ப என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. |
|
|