பாடல் எண் :3883

விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பாற் பளிங்கு வெற்பென்ன
நண்ணி நிற்கக் கீழ்பானீர் வடிந்த நடுவு நல்லவழி
பண்ணிக் குளிர்ந்த மணல்பரப்பக் கண்ட தொண்டர் பயின்மாரி
கண்ணிற் பொழிந்து மயிர்ப்புளகங் கலக்கக் கையஞ் சலிகுவித்தார்.
136
(இ-ள்) விண்ணின்.நிற்க - ஆகாயத்தினை முட்டும் பெருக்கெடுத்த ஆறு மேல் பக்கத்தில் பளிங்குமலை போலத் தங்கி நிற்க; கீழ்பால்...மணல்பரப்ப - கீழ்ப்பக்கத்தில் நீர்வடிந்த இடையில் நல்ல வழியினை உண்டாக்கிக் குளிர்ந்த மணலினைப் பரப்பியிட; கண்ட தொண்டர்.......குவித்தார் - கண்ட தொண்டர்கள் மிக்க மழைபோலக் கண்ணீர் பொழிந்து திருமேனி மயிர்ப்புளகம் கொள்ளக் கைகளை அஞ்சலியாகத் தலைமேற் குவித்து வணங்கினர்.
(வி-ரை) விண்ணின் முட்டும் பெருக்கு ஆறு - “விசும்பில் எழுவது போல்Ó (3880) என்ற கருத்து; முன் கூறியது உயர்ந்து பெருக நீர் ஓடிய நிலை; இங்குக் கூறுவது நீர் ஓடாது தேங்கி மேலோங்க வரும்நிலை; ஆதலின் முன் எழுவது போல் என்ற ஆசிரியர் இங்கு முட்டும் - பெருக்கு என்றார்.
வெற்பென்ன என் றுவமித்தது மிக்கருத்தது.
முட்டுதல் - தொடுதல்; பெருக்காறு - பெருக்கினையுடைய ஆறு.
மேல்பால் - கீழ்பால் - கிழக்கு நோக்கி ஓடும் ஆறு இடையில் பிளவுபட்டு நடைவழி காட்டவே மேல் புறம் வரும் நீர்ப்பெருக்குச் சிறை செய்து தடுக்கப்பட்டது; கீழ்பால் நீர் வடிந்து இடையில் மணல் பரப்பிய நடைவழி செய்யப்பட்டது என்பதாம்.
பளிக்கு வெற்பு என்ன - பளிங்கு - பளிக்கு என வலிந்து நின்றது செய்யுள் விகாரம். தேக்கப்பட்டமையின் தெளிந்த நீர் என்பார் பளிங்கு வெற்பென்றார்; மேல் கீழாக இயல்பாக ஓடுகின்ற நீரினை ஓடாமல் வலிந்து நிறுத்தலின், உபமேயம் வலிந்தது குறிக்க உவமானமும் வலிந்தது தெய்வத்தமிழ் நயம்; மலை - உயர்ச்சியும் பரப்பும் குறித்தது.
நல்லவழி பண்ணிக் குளிர்ந்த மணல் பரப்ப - நீர் வடியும்போது மெல்லச் சென்று மணலைப் பரப்பி நடத்தற் கேதுவாக நல்லவழி செய்தது என்பது தற்குறிப்பேற்றம்; மணல் பரப்புதல் வழியிற் பரல் முதலியன நடப்பார்க்கு ஊறு செய்யா திருத்தற்பொருட்டு. இதனை உலகியலிலும் கண்டு கொள்க.
தொண்டர் - இருபெருந் தொண்டர்களும்.
மாரி - மழைபோன்ற கண்ணிர்த் துளிகள்.
வடிந்து - மணற்பரப்பு - என்பனவும் பாடங்கள்.