நம்பி பாதஞ் சேரமான் பெருமாள் பணிய நரவலூர்ச் செம்பொன் முந்நூன் மணிமார்பர் சேரர் பெருமா னெதிர் வணங்கி உம்பர் நாத ருமக்களித்த தன்றோ?Ó வென்ன வுடன்மகிழ்ந்து தம்பி ரானைப் போற்றிசைத்துத் தடங்கா வேரி நடுவணைந்தார். | 137 | (இ-ள்) நம்பி.......பணிய - நம்பிகளது திருவடியைச் சேரர் பெருமான் பணிய; நாவலூர்....எதிர் வணங்கி - நாவலூரில் வந்தருளிய செம்பொன் போன்ற விளக்க முடைய முந்நூல் அணிந்த மணிமார்பினையுடைய நம்பிகளும் சேரர் பெருமானை எதி்ர்வணக்கம் செய்து; உம்பர் நாதர்....என்னை - இது தேவதேவர் உமக்கு அளித்த திருவருளன்றோ? என்று கூற; உடன் மகிழ்ந்து....அணைந்தார் - இருவரும் கூடி மகிழ்ந்து இறைவரைத் துதித்துப் பரவிப் பெரிய காவிரியின் நடுவில் சென்றனர். (வி-ரை) நம்பி ....பணிய - நம்பிகளது திருப்பாடலுக்கு இறைவர் செய்த திருவருள் கண்டும், தாம் வேண்டியவாறு நம்பிகள் தம்பிரானைவேண்டித் திருவையாறு பணிய வழிகண் டுதவியது கண்டும் சேரலனார் நம்பிகளைப் பணிந்தனர். எதிர் வணங்கி - அடியார் என்ற முறையில் எதிர் வணக்கம் செய்து. உம்பர்...அன்றோ என்ன - திருவையாறிறைஞ்ச மனமுருகி நைகின்றது; இவ் ஆறு கடந்து பணிவோம் நாம் (3879) என்று தம்பால் சேரமானார் வேண்டியவாறு தாம் பதிகம் பாட இறைவர் அருளியபடியால் உமக்கு அளித்தது; இஃது உம்பொருட்டு இறைவர் செய்த அருள் என்றார். ஏயர்கோன் - புரா - 18 பார்க்க. தம்பிரானைப் போற்றிசைத்து - மணல் வழிகாட்ட அதனுட் செல்லுமன் அதனைக் காட்டியருளிய இறைவரைப் போற்றிப் புகுந்தனர். தடங் காவேரி நடு - மனிதர் அணைய இயலாதபடி பெருகிய பெரிய காவேரியின் நடுவில் ஊடறுத்து என்று இதன் அருமை குறித்தது. |
|
|